சென்னை, 21, பிப்ரவரி 2022: சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய பின், நடிகர் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும், அதனைத் தொடர்ந்து தற்போது வலிமை திரைப்படத்தையும் இயக்கியுள்ளவர் இயக்குநர் எச்.வினோத்.
போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸின் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வரும் 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இயக்குநர் எச்.வினோத், நம்மிடையே பிரத்தியேக பேட்டிக்கு இணைந்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.. பதில்கள்.. இங்கே..
வலிமை படத்துக்கு வாழ்த்துக்கள் .. வலிமை கதையை முதலில் யாரிடம் சொன்னீர்கள்? அவர்களின் ரியாக்ஷன் என்ன..
பதில்: ஸ்கிரிப்ட் சொல்றதில்ல. ஸ்கிரிப்டா கொடுக்குறதுதான்.. நம்முடன் வேலை செய்ற அசிஸ்டண்ட்களிடம் கொடுத்தேன். நல்ல ரொம்ப ரியாக்ஷன் இருந்தது. முதல் வெர்ஷன் எல்லாருக்குமே பிடிச்சிருந்தது.
வலிமை வில்லன் கதபாத்திரத்த எப்படி உருவாக்குனீங்க?
பதில்: வலிமை கதையில் வில்லன் முதலில் வட மாநிலத்தவரா இருந்தார். தீரன் படத்தை பொறுத்தவரை அது உண்மை சம்பவம். தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களிலும் வடமாநிலத்தவரை வில்லனாக காண்பிப்பது சரியாக இருக்காது என கருதினேன்.
Also Read: வலிமை அஜித் சார் ஆக்ஷன் Scenes.. காலா ரஜினி சாருடன் ஸ்பெஷல் படம் - Huma Qureshi பேட்டி
எனவே வடமாநிலத்தில் நடப்பதாக இருந்த இந்த கதை, இந்தியா முழுவதும் நிகழ்வதாக மாற்றினோம். பின்னர் கொரோனா முதல் அலையின் சூழ்நிலையால் அதை தமிழ் நாட்டில் மட்டும் நடக்கும் கதையாகவும், தொடர்ந்து 2வது அலை சூழ்நிலையால், சென்னையில் மட்டும் நடக்கும் கதையாகவும் மாற்றினோம்.
சத்யன் சூர்யன்-உடன் தீரன் படத்துல வேலை பார்த்தீங்க! நிரவ் ஷா கூட NKP & வலிமை ஆகிய படங்களில் இணைந்திருக்கிறீர்கள் இவங்களோட பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது? அவங்க கிட்ட நீங்க வியந்த விஷயம் எது?
பதில்: எல்லாருடனும் ஒவ்வொரு அனுபவம். சதுரங்க வேட்டையில் K.G.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்தார். அந்த படத்தில் அவருக்கு யூனிட் கிடையாது. அவைலேபில் லைட்ல தான் 90% படம் ஷூட் பண்ணோம். 10%க்கு தான் யூனிட் இருந்தது. ஜெனரேட்டர் இல்லாததனால், மானிட்டர் பயன்படுத்தவில்லை. பழைய பிலிம் காலத்தில் எப்படி பண்ணாங்களோ அப்படிதான் பண்ணோம்.
Also Read: ‘ரஜினியுடன் அடுத்த படமா?’ - வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரின் பரபரப்பு விளக்கம்!
இதுல K.G.வெங்கடேஷ் எல்லாம் கேமரா மேனா மட்டும் இல்லாமல்.... ஊருக்கு ஒதுக்குப்புறமாய் ஒரு குடிசை போட்டிருப்போம்.. அதில் நானும் K.G.வெங்கடேஷூம் தான் தரையே போட்டோம் (சிரிக்கிறார்), அது வேற.. அடுத்ததாக தீரனில் சத்யன் சூர்யனுடன்.. புரொடக்ஷனில் இருந்து கொடுத்தாங்க.. புரொடக்ஷனுக்கு என்ன தேவை, அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் உள்ளிட்டவற்றுக்குள் தரத்துடன் கொடுக்கும் பணியில் அவர் ஈடுபட்டார்.
நிரவ் ஷா சார் விஷயத்தில் எனக்கே ஒரு பெரும் அனுபவமுள்ள நபராக தேவைப்பட்டார். பல மொழி பேசுபவர்கள் இந்த படத்துக்குள் வருவார்கள். அவர்களுடன் இணைந்து பணிபுரிவது உட்பட பல வகையிலும் நிரவ் ஷா சார் ஒரு ஆளுமையான நபர் என்பதால் அவரை இப்படத்திற்காக ஆலோசித்தோம். அந்த சமயத்தில் போனி கபூர் சாருடன் நிரவ் ஷா சார் பணிபுரிந்துகொண்டிருந்தார். அதன் மூலம் அவர் வலிமை புராஜக்டுக்குள் வந்தார். நான் பொதுவாகவே கேமரா மேனுடன் டெக்னீக்கல் விஷயங்களில் மிகவும் நுழைய மாட்டேன். அடிப்படையில் கதைக்கு என்ன தேவையோ அதை கொண்டுவருவது தான் விசயம்.
அஜித் நடிச்ச அமர்க்களம் படம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படம்னு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீங்க.. அது போல ஆக்ஷன் கம்மியா? ஒரு ரொமாண்டிக் அல்லது ஃபீல் குட் படம் அஜித் - வினோத் காமினேஷன்ல வந்தா எப்படி இருக்கும்? எதிர்பார்க்கலாமா?
பதில்: எனக்கு வராத விஷயத்தை நான் ஏன் தலைவரே டிரை பண்ணனும் (சிரிக்கிறார்)..
வலிமை படத்துல 11.1 சரவுண்ட் சிஸ்டம், ஒளிப்பதிவுல 3 விதமான Aspect Ratio.. இதை முன்கூட்டியே முடிவு செய்திருந்தீங்களா?
பதில்: இல்லை. ஸ்கிரிப்ட் எழுதும்போது முடிவு செய்யப்படவில்லை. கதையில் இருக்கும் வெவ்வேறு காலக்கட்டத்துக்கான (உதாரணமாக பிளாஷ்பேக்) வித்தியாசத்தை திரைக்கதையில் காட்டவே Aspect Ratio-வை பயன்படுத்தியிருக்கோம். ரஷ்யாவில் படமாக்கப்பட்ட சில காட்சிகளில் இந்த பிரச்சனை இருந்தது.
ஆனால் அவற்றையும் நம்மூர் Ratio-வுக்கு கேமரா மேன் உதவியுடன் மாற்றினோம். எனவே முன் கூட்டியே தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் இந்த வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்பதை டெக்னீசியன்களிடம் முன்பே சொல்லிவிடுகிறோம். புராசஸ் நடக்கும்போதை அதன் போக்கில் அமைவது தான் அது. இருப்பினும் இடத்துக்கு தகுந்தாற்போல் அவை நன்றாகவே வந்திருக்கின்றன.
அஜித்தின் ஆரம்பம், விவேகம் படங்களிலும் பச்சை நிறம் அதிகமா இருக்கும், வலிமை படத்திலயும் பச்சை நிறம் அதிகமா இடம் பெற்று இருக்கே.. இதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கா?
பதில்: அவ்ளோ டீப்பா-லாம் போகல.. டிசைனர் ராகுல் நந்தாவிடம் இந்த கதையின் உள்ளடக்கத்தை சொன்னேன்.
என்னதான் ஃபேமிலி படமாக இருந்தாலும், இதில் இருக்கும் பைக், ஆக்ஷன் என்றெல்லாம் சொல்லும்போது அவங்களுக்குள் ஒன்னு தோனும். அப்போ இந்த படத்தை ஆக்ஷன் படமாக புரொஜக்ட் பண்ணா நல்லாருக்கும் என்று அவர்கள் தரப்பில் பேசி சந்தைக்கு தகுந்தாற்போல் வந்தது தான் அந்த ஃபாண்ட், கலர் எல்லாமே.
சதுரங்க வேட்டைல பென்ஸ் வைஸ், தீரன்ல லாரி ராட், நேர்கொண்ட பார்வை படத்துல தம்புள் ராடு, வலிமைல ரெக்கிங் பால்.. எப்படி இந்த ஆயுதங்களை தீர்மானிக்கிறீங்க? இதுக்கு ஸ்டண்ட் மாஸ்டர்ஸோட பணிபுரிந்த அனுபவத்தை சொல்லுங்களேன்..
பதில்: அப்படி இந்த ஆயுதங்களை தீர்மானிக்கவெல்லாம் இல்லை, ஆனால் ஒரு ஃபைட் எடுக்கும்போது ஹீரோ எதில் அடிக்கிறார் என ஃபைட் மாஸ்டர்ஸ் கேப்பாங்க. பொதுவா ஃபைட் மாஸ்டர்ஸ் என்ன முடிவு செய்வார்கள் என்றால் கியர் ராடு உள்ளிட்ட பொருட்களை வெல்டு பண்ணி ஒரு ஆயுதத்தை உருவாக்குவாங்க.
நாம் அன்றாட வாழ்க்கையில சில பொருட்களை பார்போம்ல? அந்த பொருள் நம்ம மேல பட்டால் அதன் தாக்கத்தை நாம் உணர முடியும்ல? ஜிம்முக்கு போறோம் தம்புள்ஸ் காலில் பட்டுவிட்டால் உண்டாகும் வலி நமக்கு தெரியும்ல? ஒரு டேபிளில் நம் முட்டி இடித்துவிட்டால் எப்படி வலிக்கும்னு நமக்கு தெரியும்ல.. அவற்றை ஆயுதமாக மாற்றினால் தான் அதன் வலி பார்ப்பவர்களால் உணர முடியும் என்று நினைத்தோம். அதனால் நேர்கொண்ட பார்வை படத்தில் தம்புள்ஸை கட் பண்ணி, ராடுடன் சேர்த்து வெல்டு பண்ணி ஆயுதமாக மாற்றினோம். வலிமை படத்துலயும் அப்படித்தான் ஆயுதத்தை உருவாகியிருக்கோம்.
சதுரங்க வேட்டை வினோத் >> தீரன் வினோத்>> வலிமை வினோத்.. திரைக்கலை ரீதியான என்ன ஒரு வளர்ச்சியை/வித்தியாசத்தை மேஜராக உணர்கிறீர்கள்?
பதில்: “இயற்கையா படம் எடுக்க எடுக்க ஒரு லேர்னிங் இருக்குமில்ல.. நம்ம கூட வேலை செய்யிற டெக்னீஷியன் கிட்ட இருந்து.. ரிவ்யூவர்ஸ் கிட்ட இருந்து... அப்றம் பப்ளிக் ஒப்பீனியன்ஸ்.. எல்லாமே என் கிராஃப்ட்ட டெவலப் பண்ணி இருக்குன்னு நம்புறேன்”!
Also Read: "வலிமை அஜித்-க்கு பண்ண கதையா?".. இயக்குநர் H.வினோத் பேட்டி! Exclusive Part-2