சென்னை, 16, பிப்ரவரி 2022: நடிகர் அஜித்குமார் நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 'வலிமை' திரைப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று 4 மொழிகளில் ரிலீசாக உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ள வலிமை திரைப்படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வலிமை திரைப்படம்
போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கலை இயக்குனராக கதிர் பணியாற்றுகிறார்.
அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராகவும், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் ஆகியோரும் பணியாற்றுகிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.
சவுண்ட் மிக்ஸிங்
வலிமை திரைப்படத்தின் சப்தம், இசை உள்ளிட்டவை அடங்கிய சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங் பணிகளில் தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் MR ராஜகிருஷ்ணன் ஈடுபட்டார். இவர் ஏற்கனவே, போனி கபூர் - அஜித் - எச்.வினோத் தயாரிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்திற்கும் பணிபுரிந்தவர்.
வலிமை திரைப்படத்தில் இன்னொரு பிரபல இசையமைப்பாளர்
முன்னதாக வலிமை திரைப்படத்தில் யுவன் இசையில் உருவாகி வெளியாகியிருந்த ‘நாங்க வேற மாரி’ எனும் தொடக்க குத்து பாடல், ‘அம்மா’ செண்டிமெண்டில் உருகவைக்கும் அம்மா பாடல் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்நிலையில் தான் வலிமை திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடல்களுக்கு இசையமைக்க, யுவனுடன் இணைந்து பின்னணி இசைப்பணியை பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் மேற்கொள்ளும் நம்பத்தகுந்த மற்றும் பரபரப்பு தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
11.1 Surrounds mixed
அத்துடன் வலிமை திரைப்படம் 11.1 சரவுண்ட் சவுண்டு அமைப்பில், டால்பி சவுண்டு அட்மாஸ்பியர் டெக்னாலஜியில் உருவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. திரைப்படத்தின் ஒவ்வொரு நுணுக்கமான இசை அளவுகளும், இசைக் கருவிகளின் ஒலிகளுமே சரியான சப்த ஒழுங்குடன் மிக்ஸ் செய்யப்பட்டு - அதே சமயம் அவற்றுக்கென்ற தனித்துவமான சப்தத்துடன் ஒரே நேரத்தில் பிரித்து கொடுக்கும் இந்த டெக்னாலஜி தான் 2.1, 5.1, 7.1, 11.1 என்றெல்லாம் வகைப்படுத்தப் படுகிறது.
எப்படி இருக்கும் இந்த சவுண்டு எக்ஸ்பீரியன்ஸ்?
அதில் 11.1 வகையில் ஏற்கனவே கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் உருவாகி வெளியாகியிருந்தது. இப்படி உருவாகும் ஒரு திரைப்படம், திரையரங்குகளில் பார்வையாளருக்கு கொடுக்கும் சவுண்டு எக்ஸ்பீரியன்ஸ் அலாதியானது. அதுவும் டால்பி சவுண்டு அட்மாஸ்பியரில் பார்த்தால், அது வேற மாரி இருக்கும். அதைத்தான் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செய்யப் போகிறது!