நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் தெலுங்கு உரிமம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் H வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் அஜித் குமார்.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.
ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, துணிவு படத்தின் முதல் சிங்கிளான் 'Chilla Chilla' பாடல், வரும் டிசம்பர் 09 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல, துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது என்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கில் துணிவு படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள நிறுவனம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை IVY ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ தகவலை அவர்களே தங்களின் ட்விட்டர் பக்கங்களில் அறிவித்துள்ளனர். ஐவிஒய் நிறுவனம் ஏற்கனவே வலிமை படத்தினை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.