வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித் தனது ட்ரோன் கேமராவை இயக்கி வீடியோ எடுக்கும் காட்சியை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
அஜித்தின் வலிமை
அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைத்திருந்தனர். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி நான்கு மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியிட்டனர்.
வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், முதன்மை பெண் கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷியும் நடித்திருந்தனர். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றினார். கலை இயக்குனராக கதிர், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார்கள்.
ரசிகர்களின் ஆதரவைக் குவித்த ஸ்டண்ட் காட்சிகள்
வலிமை படம் ரிலீஸானது முதல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிவருகிறது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்க வைத்தன. அந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஹாலிவுட் படங்களின் காட்சிகள் போல உள்ளதாக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டன. இந்த ஸ்டண்ட காட்சிகளுக்காக அஜித், வினோத் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் அடங்கிய படக்குழு கடுமையாக உழைத்துள்ளனர். இந்த ஸ்டண்ட் காட்சிகளின் போது எதிர்பாராத விதமாக அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்த மேக்கிங் காட்சி ஒன்று வெளியாகி ரசிகர்களைப் பதற்றமடைய வைத்தன. ஆனால் காயத்தை பெரிது பண்ணாமல் அஜித் சில நிமிடங்களில் மீண்டும் அந்த காட்சியில் நடித்தார்.
அஜித்தின் இதர ஆர்வங்கள்
சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் அஜித் ஹெலிகேம் எனப்படும் சிறிய ட்ரோன்களை இயக்குவது, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஐஐடியில் அஜித்தின் வழிகாட்டுதலில் ட்ரோன்களை இயக்கும் தக்ஷா என்ற குழு ஒன்று செயல்படுகிறது. அந்த குழு அவசரகாலத்தில் மருத்துவ உதவிகளை விரைவாக எடுத்துச் செல்ல ட்ரோன்களை இயக்கி வருகிறது. இந்த தக்ஷா குழு பெங்களூருவில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரெட் ஸோன்களில் இந்த ஆளில்லா விமானங்கள் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடந்தன.
வெளியானக் காட்சி
இந்நிலையில் இப்போது வலிமை படப்பிடுப்புத் தளத்தில் அஜித் ட்ரோன் கேமராக்களை இயக்கும் வீடியோ ஒன்று படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கான உடையோடு இருக்கும் அஜித் அந்த வீடியோவில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு வீடியோ காட்சிகளை எடுத்து வருகிறார். அவரை சுற்றி படக்குழுவினர் அஜித்தின் இந்த பணியை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.