சென்னை: திருமண பிரிவுக்கு பின் நடிகர் தனுஷ் பெயரை ஐஸ்வர்யா நீக்கியுள்ளார்.
நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியது.
"18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.
ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படமும், அது போக இந்தியில் ஒரு படத்தையும் இயக்க உள்ளார். இவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. பயணி மியுசிக் வீடியோவும் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் ஐஸ்வர்யா சமூகவலை தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம், டிவிட்டரில் User Name & Handle Name -ல் ஐஸ்வர்யா தனுஷ் என்பதிலிருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார். மேலும் இந்த பெயர் மாற்றம் டிவிட்டர் & இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.