ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 14 (தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு) ரிலீஸ் ஆகியுள்ளது.
'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல், KPY வன்னியரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர்.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படமான சொப்பன சுந்தரி படத்தை தயாரித்துள்ளனர்.
அம்மா, மாற்றுத் திறனாளி அக்கா, படுத்த படுக்கையாக கிடக்கும் அப்பா ஆகியோருடன் சுயமரியாதையுடன் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துக்கு தங்க நகைக்கடை மூலமாக கார் ஒன்று பம்பர் பரிசாக அடிக்கிறது. இதை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் அபகரிக்க முயற்சிக்கிறார். அது ஏன்? இறுதியில் அந்த கார் யாருக்குச் சென்றது? என டார்க் காமெடி மற்றும் செண்டிமெண்ட் கலந்த ஜானரில் ஜனரஞ்சமாக உருவாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக குடும்பத்துடன் ஜாலியாக டைம் பாஸ் செய்ய கூடிய படம் என்றும், இரண்டு மணி நேரம் போறதே தெரியாது என்றும் கூறியுள்ளனர். மேலும் இது ஒரு சாதாரண கதை என்றாலும் திரைக்கதை விறுவிறுப்பாக உள்ளது என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்கும் படம் சொப்பன சுந்தரி என்றும் பாராட்டி உள்ளனர். மொத்தத்தில் பக்காவான பொழுது போக்கு திரைப்படம் சொப்பன சுந்தரி என்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.