மலையாள மொழியில் வெளியாகி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை உண்டு பண்ணிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.
இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிப்பில் தமிழில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் R.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இப்படத்தின் விழாவில் பத்திரிகையாளர்களிடையே பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், “கடவுள் எல்லாருக்குமே ஒன்னுதானே? ஆண் பெண் வித்தியாசம் என்னை பொருத்தவரைக்கும் இல்லை. எந்த கடவுளுமே தன் கோவிலுக்கு இன்னார் வரக்கூடாது, இன்னார் வரவேண்டும் என சொல்லவில்லை. இதெல்லாம் நாமாக உருவாக்கிக் கொண்ட சில சில சட்டங்கள் தான். எந்த கடவுள் சொல்லியிருக்கார்? யாராவது ஒரு கடவுளாவது அப்படி சொல்லியிருக்காரா? என்னை பொருத்தவரை அதுதான் இந்த படத்தில் இருக்கிறது.
நான் சபரிமலை என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாகவே எந்த கடவுளுமே எந்த கோயிலிலும் இப்படி செய்யக்கூடாது, இதை செய்ய வேண்டும், இதை சாப்பிட கூடாது, தீட்டு உள்ளிட்ட பல விஷயங்களும் நாமளே உருவாக்கினது தான். கடவுளுக்கும் இவற்றுக்கும் சம்மந்தமே இல்லை என்றுதான் நான் சொல்லுவேன்.
க/பெ ரணசிங்கம் என ஒரு படம் பண்ணியிருப்பேன். அதில், தங்கை கேரக்டர் பீரியட் நெரத்தில் சமைக்காமல் வீட்டில் இருக்கும்போது நான் ஒரு வசனம் சொல்லியிருப்பேன், எந்த கடவுளுமே தீட்டு கீட்டு கோயிலுக்கு வர கூடாது போக கூடாது என சொன்னது கிடையாது, இது நாமளாக உருவாக்கிக் கொண்ட விஷயங்கள் தான். இவை மக்கள் நம்புவது, எந்த மக்கள் என்று கூட நமக்கு தெரியாது. ஆனால் கடவுள் எந்த சட்டமும் வைக்கவில்லை. நான் இவற்றையெல்லாம் நம்புவதும் கிடையாது. எனக்கு இவ்விதமான நம்பிக்கைகள் இல்லை” என பத்திரிகையாளர்களின் தொடர் கேள்விகளுக்கான பதில்களை அளித்தார்.