வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னனி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் தற்போது ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தமிழில் தங்களது முதல் படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. 'லாக்கப்' படத்தை இயக்கிய இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். இவருடன் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல், KPY வன்னியரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. டார்க் காமெடியில் தயாராகி இருக்கும் 'சொப்பன சுந்தரி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தை ஒட்டி பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை தீபா மற்றும் இயக்குநர் எஸ். ஜி. சார்லஸ் இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.
முன்னதாக வெளியான சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை தீபா பேசும்போது, “எனக்கு இது பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்புக்கு இயக்குநருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்திருந்தேன். இப்போது இப்படி ஒரு படத்தில் அம்மாவாக நடித்துள்ளேன், ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் எதார்த்தமாக பழகினார். எனக்கு இதன் மூலம் இன்னும் பல வாய்ப்புகள் என நம்புகிறேன்” என பேசினார்.
அவரது கதாபாத்திரம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது, “தீபா அக்காதான் இந்த படத்தில் லீடு கதாபாத்திரம். அவருக்கு இது முக்கியமான படம். நான் முகஸ்துதிக்காக சொல்லவில்லை. உண்மையில் அவர் அதற்கு தகுதியானவர். ஷூட்டிங் செட் கொளுத்தும் வெயிலில் கொடூரமாக இருக்கும். நான் எப்போதும் சீரியஸான படம் பண்றோமே, இதில் ஜாலியாக ஒரு படம் பண்ணலாம் என நினைத்து போனேன். ஆனால் நொந்துட்டேன். அதே சமயம் ஷூட்டிங் செட் மிகவும் அருமையாக இருந்தது. நான் சிரிக்க ஆரம்பித்தால், 15 நிமிடம் ஷூட்டிங் நடக்காது, பிரேக் விட்டு சென்றுவிடுவார்கள், ஏனென்றால், நான் நினைத்து நினைத்து சிரிப்பேன்; ஆனால் தீபா அக்கா சிரித்தால் ஒரு நாள் ஆகிவிடும் நிப்பாட்ட. அப்படி அவர் நடித்த ஒரு காட்சியில் நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் இருந்தோம், அந்த காட்சி படத்தில் கட் ஆகிவிட்டது போல” என்றார்.
உடனே தீபா அக்கா, “அடப்பாவமே... அந்த ஒரு சீனை நம்பிதானே நான் கற்பனை பண்ணிக்கொண்டிருந்தேன் அந்த காட்சியை படத்தில் வைங்க” என சொல்ல, இயக்குநரோ, “அதை விட சிறப்பான காட்சிகள் பல இடம்பெற்றிருக்கிறது. கவலை வேண்டாம்” என ஜாலியாக கூறினார். மேலும் பேசிய தீபா அக்கா தான் சிரிக்க ஆரம்பித்துவிட்டால் சிரிப்பை கண்ட்ரோல் முடியவில்லை தன்னால் என்றும் அதனாலேயே எளிதில் தான் சிரிக்க தொடங்குவதில்லை என்றும் கூறினார்.