அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். சுந்தர சோழர் கதாபாத்திரல் பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். சம்புவராயன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி, சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் அஷ்வினும், நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராமும் நடிக்கின்றனர். மதுராந்தக தேவராக ரகுமான், பாண்டிய ஆபத்துதவி தலைவனாக ரவிதாசன் கேரக்டரில் கிஷோர், பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு, அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு, சிறுவயது நந்தினியாக சாரா அர்ஜூன், வாசுகியாக வினோதினி, தம்புலா புத்த பிக்ஷூ கதாபாத்திரத்தில் கோபி கண்ணதாசன் நடிக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை. நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், பூங்குழலி படகு ஓட்டும் போது வரும் பாடல் மிக குறைந்த நேரமே ஓடுகிறது. இது குறித்து உங்களுக்கு வருத்தம் இருந்ததா? என்று ஐஸ்வர்யா லெஷ்மியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா லெஷ்மி, “உண்மையில் எனக்கு ஃபீல் ஆகிவிட்டது. ஆனால் இலங்கை வந்துவிட்டது என்று சொல்லி சார் மணி சார் அந்த பாடலை அங்கேயே நிறுத்திவிட்டார். நான் கேட்க வேண்டிய என் மனதில் இருந்த கேள்வியை அந்த நிருபர் கேட்டு விட்டார் (விளையாட்டாக சொல்கிறார்). ஒரு நடிகையாக எனக்கு அந்த பாடல் இப்படி ஒரு படத்தில் மிகவும் பிடித்தது, எனவே தியேட்டரில் படம் பார்க்கும்போது அந்த பாடல் முழுமையாக வராதது எனக்கு வருத்தத்தை அளித்ததுதான். ஆனால் அதே சமயம் படம் போகக்கூடிய ஓட்டத்தில் அந்த பாடல் படத்தை தொய்வடையச் செய்யும் என்பதை நான் உணர்கிறேன் என்பதால் அந்த இடத்தில் அது சரியான முடிவு தான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அதையே மற்றவர்களும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்!” என்று விளக்கம் அளித்துள்ளார்.