2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்கிறார்.
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியானது. காமெடி த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி மற்றும் ஒடிடி உரிமத்தை முறையே பிரபல முன்னணி நிறுவனமான சன்டிவி & சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெயல்ர்படி, ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஒட்டி காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சந்தானம், “எல்லா காலங்களிலுமே மக்கள் புத்திசாலியாகவே இருக்கின்றனர். நன்றாக படம் பண்ணினால் மக்கள் மத்தியில் அந்த படம் ஹிட் ஆகும். அரைச்ச மாவையே அரைச்சால் துப்புவார்கள். முன்பிருந்த காலங்களில் அந்த அளவுக்கு சோசியல் மீடியாக்கள் எதுவும் இல்லை. இப்போது அவை அதிகம் இருப்பதால் இன்னும் நன்றாக துப்புவார்கள். அப்படி மாவை அரைத்தால் அதற்கு எதிராக வரும் விமர்சனங்களையும் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அவர்களின் விமர்சனத்தை ஃபீல் பண்ணி தான் ஆக வேண்டும். அதே சமயத்தில் நாம் நடிக்கிறோம், நடித்து முடித்து விட்டோம், ஒவ்வொன்றிலும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. அடுத்ததை பார்த்தாக வேண்டும். நமக்கு நாம் திருப்தியாக, நிறைவாக நடிக்கிறோமா, என்பதை மட்டும் தான் பார்க்க முடிகிறது” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெலுங்கு படங்களுக்கே தியேட்டரில் முன்னுரிமை கொடுப்பதாக குறிப்பிட்டு வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “நம்முடைய தாய் மொழிக்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். அது போல தான் அவர்களுடைய தாய்மொழிக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.. அவ்வளவுதான்” என்று பதில் கூறினார்.
மேலும், “ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் ஒரு டார்க் ஹியூமர் வகையில் இருக்கும். இயக்குனர் என்னை அதிகமாக காமெடி பண்ண வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்னை சுற்றி இருப்பவர்கள் காமெடி பண்ணுவார்கள். குளு குளு திரைப்படத்திலும் அப்படித்தான் இருந்தது. இந்த படத்தில் புகழ் நடிக்கிறார் என்னுடன், அவர் ஒன்று சொன்னால் உடனடியாக நான் கவுண்டர் கொடுக்க முயற்சிக்கிறேன். ஆனாலும் அது வேண்டாம். இது அந்த மாதிரி படம் இல்லை என்று இயக்குனர் சொல்லிவிடுவார். அவர் எப்படி என்றால், நாங்கள் எதார்த்தமாக ரிகர்சல் பண்ணும் பொழுது அதையே சீனாக எடுத்து விடுவார். நாம் சீரியஸாக கையெழுத்து போடும் சீன் என்று நினைத்து கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தால், அவர் கையை போக்கஸ் செய்யாமல் கண்களை ஃபோக்கஸ் செய்து கொண்டிருப்பார்.
வேறு ஒரு காட்சியில் நாம் மெனக்கட்டு நடித்துக் கொண்டு இருந்தால் நம் உடல் மொழி எப்படி இருக்கிறதோ அதை க்ளோசப்பில் கவர் பண்ணி இருப்பார். அப்படி வித்தியாசமாக எடுக்கிறார். எனக்கு இது புதுசாக இருந்தது. ஏஜென்ட் கண்ணாயிரம் மாஸானவர் கிடையாது. தமாஷானவர். ஆனால் அப்படிப்பட்ட தமாஷான ஒரு ஏஜென்ட் எப்படி ஒரு பயங்கரமான விஷயத்தை கண்டுபிடிக்கிறான் என்பது தான் இதில் இருக்கும் சுவாரஸ்யம்.வ் இந்த படத்தின் ஒரிஜினல் படத்தை பார்த்தவர்கள் கூட இந்த படத்தை ரசிக்கும்படியாக புதுமையாக பல முயற்சிகளை செய்து எடுத்திருக்கிறார்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.