2019 ஆம் ஆண்டு ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன் பொலிச்செட்டி, ஸ்ருதி ஷர்மா நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ ஆத்ரேயா'. இந்த படம் தெலுங்கில் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடிக்கிறார்.
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ரியா சுமன் நடிக்கிறார். படத்தின் முதல் பார்வை போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியானது. காமெடி த்ரில்லர் வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி மற்றும் ஒடிடி உரிமத்தை முறையே பிரபல முன்னணி நிறுவனமான சன்டிவி & சன் நெக்ஸ்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் டிரெயல்ர்படி, ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை ஒட்டி காட்சிகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு பேசிய நடிகர் சந்தானம் , “வாரிசு பாப்பீங்களா? துணிவு படம் பாப்பீங்களா?” என கேட்ட நிரூபர் ஒருவரின் கேள்விக்கு, அவரையே அழைத்து, “நீ எது பாப்ப” என கேட்கிறார், அதற்கு பதில் அளித்த அந்த நிரூபர், “நான் ரெண்டு படமும் பார்ப்பேன்” என சொன்னதும், “நீயே ரெண்டு படமும் பாக்கும்போது, நான் ரெண்டு படமும் பாக்க மாட்டனா?” என கேட்டு தன் பாணியில் ஜாலியாக கலாய்த்தார்.