மறைந்த முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவுள்ள தகவலை அதிகாரப்பூர்வமாக அவரே வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டை பொறுத்தவரை அரசியல் மற்றும் திரை ஆளுமைகளின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் பயோபிக் எடுக்கப்படுவது வழக்கமானது தான். நடிகை கங்கனா ரணாவத் ஜான்சி ராணியின் பயோபிக்கில் நடித்துள்ளார்.
தவிர இயக்குநர் விஜய் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். எனினும் இந்த படம் ஒரு பயோபிக் போன்று இருக்காது என்றும், இந்திரா காந்தியின் ஆட்சியில் ஒரு குறிப்பிட்ட காலமான எமர்ஜன்ஸி காலக்கட்டத்தை பற்றிச் சொல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி முடியும் தருவாயில் இருப்பதாகவும், இப்படம் பிரம்மாண்டமான அந்தக் காலகட்டத்தை சொல்வதன் மூலம் இந்தியாவின் இப்போதைய சமூக அரசியல் நிலையை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள உதவும் ஒரு படமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படத்துக்கு, கங்கனா நடிப்பில் ‘ரிவால்வர் ராணி’ படத்தை இயக்கிய சாய் கபீர், இயக்கம், கதை, திரைக்கதை உள்ளிட்ட பணிகளைக் கவனிக்கிறார். மேலும் இந்த படத்தை தமது மணிகர்ணிகா (manikarnikafilms) பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் கங்கனா தயாரிக்கவுள்ளார்.
அத்துடன் இந்திரா காந்தியைப் போன்ற தோற்றத்தில் கங்கனா காட்சி அளிக்கும் சில பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ALSO READ: ரஷ்ய சாலையில், புடவையுடன் கெத்தாக நடைபோடும் தாப்ஸி!.. டாப் ட்ரெண்டிங் ஃபோட்டோ!