நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதனிடையே ரஜினி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி, இப்போது அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டு, அரசியலுக்கு வர போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும் கிடைத்தது.
இதை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினிகாந்த் எடுத்த முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்றும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகொள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது, ''என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு..
நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்''.
— Rajinikanth (@rajinikanth) January 11, 2021