பிரபல மலையாள நடிகர் விநாயகன் மீது சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் நடித்த ‘திமிரு’, மலையாளத்தில் துல்கர் சல்மானின் ‘களி’, ‘கம்மட்டி பாடம்’, தனுஷின் ‘மரியான்’, சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு கேரளாவில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மலையாள நடிகர் விநாயகன், ஆர்.எஸ்.எஸ் – பாஜகவுக்கு எதிராக கருத்து கூறியிருந்தார். அதில், பாஜக கேரளாவில் கால் ஊன்றுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விநாயகன், ‘நாம் புத்திசாலியான மக்கள். அவர்கள் (ஆர்.எஸ்.எஸ் – பாஜக) இங்கும் எதுவும் செய்யமுடியாது. சங் பரிவார – பாஜக கொள்கைகளை கேரள மக்கள் புறக்கணித்ததில் பெரும் மகிழ்ச்சி’ என கூறியிருந்தார்.
இது தொடர்பான வீடியோவையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து, நடிகர் விநாயகனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக ஆதரவாளர்கள் பலர் கருத்துக்களை பகிர்ந்ததுடன், அவருக்கு மிரட்டல்களும் விடுத்தனர். இவ்விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் போய்க் கொண்டிருந்த நிலையில், பெண் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் நடிகர் விநாயகன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
பெண் எழுத்தாளரும், ஊடகவியலாளருமான மிருதுளா சசிதரன் தனது ஃபேஸ்புக் பதிவில், ‘நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் விநாயகன் நடிகைக்கு ஆதரவாக இருந்த செயலை மதிக்கிறேன். ஆனால், நிஜ வாழ்வில் அவர் பெண்களுக்கு எதிரானவர். எனக்கு நேரடியாகவே பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர் மீது எனக்கு மரியாதை இல்லை. பாதுகாப்பிற்காக அவர் பேசியதை நான் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன்’ என கூறியிருந்தார்.
இதனையடுத்து, சமூக வலைதளங்களில் நடிகர் விநாயகன் உடனான பல்வேறு கசப்பான சம்பவங்கள் குறித்து பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில், ரேகா ராஜ் எனும் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் தனது பதிவில், மிருதுளா சசிதரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நடிகர் விநாயகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். இவ்விவகாரம் மலையாள திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.