தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குயின்சியும் வெளியேறி இருந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்’ என்கிற இந்த வார டாஸ்க்கின்படி, எது சொர்க்கம், எது நரகம், யார் நல்லவர், எவர் கெட்டவர், நரகத்தில் உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு போவதற்கான குறுக்கு வழி எது என கண்டுபிடித்து சென்றால்? அப்படி செல்ல ஒரு குறுக்கு வழி இருந்து, அதன் வழியே சொர்க்கத்தில் உள்ளவர்களை நரகத்திற்கு அனுப்ப முடிந்தால்?.. எப்படி இருக்கும் என்பதே இந்த டாஸ்க். இதிலும் வழக்கம்போல, சொர்க்கவாசிகள் வீட்டின் உள்ளேயும் நரகவாசிகள் கார்டன் ஏரியாவின் கூண்டிலும் அடைக்கப்படுவார்கள்.
ஆக, நரகவாசிகள் கொடுக்கப்படும் நேரத்திற்கு சைக்கிள் ஓட்டி உழைத்து களைத்து, சொர்க்கத்திற்கு நேர்வழியில் போகலாம். அது முடியாவிட்டால், அடைக்கப்பட்ட கூண்டில் இருந்து தப்பி, சொர்க்கத்துக்கான பாதை வழியே ஓடலாம். அதேசமயம் சிக்குனா சிதைச்சுருவாங்க.. தண்டனைகள் அவ்வளவு கடுமையாக இருக்கும் என்பதையும் அவர்கள் மனதிற்கொள்ளவேண்டும்.
இந்த சொர்க்கவாசி - நரகவாசி விளையாட்டில்தான், அசீம் - ஏடிகே இடையே உண்டான வாக்குவாதத்தால், சொர்க்கவாசியான ஏடிகே கோபமாக பேச, அவர் சில சைகைகளை செய்ய, அதற்குள் இவர்கள் இருவரையும் விக்ரமன் சமாதானம் செய்தார். அப்போது விக்ரமனிடம் தனியே அமர்ந்து பேசிய ஏடிகே, “எனக்கு எமோஷனை கட்டுப்படுத்தும் வலிமை இல்லை. யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவேன், என் பக்கத்தில் யாராவது உட்கார்ந்து அழுதால் கூட, அதை அப்படியே நம்பி விடுவேன், சிரித்தாலும் நம்பிவிடுவேன்” என உருக்கமாக பேசினார்.
மேலும் தொடர்ந்தவர், இதனால், தனது 8 வயது மகன் கூட இப்போது தன்னுடன் இல்லை என சொல்லி, கதறி அழுத ஏடிகேவிடம், தைரியத்தை இழக்க வேண்டாம் என விக்ரமன் தன்னம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஜாலியாக ராப் பாடல்களை பாடி வைப் பண்ணும் ஏடிகேவின் மனசுக்குள் இப்படி ஒரு சோகம் இருக்கிறதா? என அவருக்கு ஆறுதல்களை சொல்லி வருகின்றனர்.