தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் அதிகம் பிரபலமாக இருப்பது போல சில காமெடி நடிகைகளும் மக்கள் மத்தியில் அதிகம் பெயர் எடுத்துள்ளனர். அந்த வகையில் மிக முக்கியம் ஆனவர்களில் ஒருவர் நடிகை சுமதி.
இவர் தோன்றும் திரைப்படங்களில் மிகவும் ஆக்ரோஷமாக அதே வேளையில் காமெடி கலந்து இருக்கும் ரோல்களில் நிறைய நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக, நடிகர் வடிவேலுவுடன் சுமதி இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள், இன்றளவிலும் ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த கூடியவை. ஐயா, கருப்பசாமி குத்தகைத்தாரர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வடிவேலுவுடன் சுமதி நடித்த காமெடி காட்சிகள் நினைக்கும் போதே சிரிப்பை வர வைக்கக் கூடியவை.
நடிகை சுமதியின் வேதனை பக்கங்கள்
இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் நடிகை சுமதி தற்போது அளித்துள்ளார். சினிமா மூலம் பலரையும் சுமதி சிரிக்க வைத்தாலும் அவரது குடும்ப பின்னணி அதிக வேதனைகள் நிறைந்து இருந்தது இந்த பேட்டி மூலம் தெரிய வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் பட்ட பல்வேறு கஷ்டங்கள் குறித்தும் உணவில்லாமல், உடையில்லாமலும் சிறுவயதில் பட்ட கஷ்டம் பற்றியும் பல உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார் நடிகை சுமதி.
அதே போல, வீட்டை விட்டு வெளியேறி சீரியல்களில் நடித்த சமயத்தில், தனது பெற்றோர்கள் மகள் இறந்து போய் விட்டாள் என கருதியதாகவும், பின்னர் டிவியில் தனது தந்தை தன்னை பார்த்த பிறகு தான், மகள் உயிருடன் இருக்கிறார் என தெரிந்து கொண்டாதாகவும் வேதனையுடன் சுமதி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தற்போது சில படங்களில் நடித்து ஓரளவுக்கு நல்ல நிலைமையில் இருந்தாலும் நிறைய வாய்ப்புகள் தனக்கு கிடைக்கவில்லை என்றும் பல இயக்குனர் மற்றும் நடிகர்கள் நிறைய வாய்ப்புகள் தராமலேயே காமெடி என்ற வட்டத்திற்குள் தன்னை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
மேலும் இந்த பேட்டியில் ரஜினி சார் தன்னை ஒரு முறை பாராட்டியது பற்றி பேசி இருந்த நடிகை சுமதி, "EVP -ல பேட்ட படத்தோட செட்டு போட்டு எடுத்துட்டு இருந்தாங்க. நான் பேக்ரவுண்ட் எல்லாம் போயிட்டு இருந்தோம். அப்ப ரஜினி சார் வந்ததும் நாங்க அவரை விஷ் பண்ண போனோம். எனக்கு முன்னாடி ஒரு நாலு பேரு விஷ் பண்ணிட்டு இருக்காங்க. நான் அப்படியே விஷ் பண்ணிட்டு அங்க நிற்கிறேன்.
அவர் அவ்வளவு தூரம் போயிட்டு திரும்பி ரிட்டர்ன் வர்றாரு. திரும்ப வந்து என் முகத்தை நல்லா இப்படி பார்த்துட்டு, தோள் மேல தட்டி, ' என்ன ஒரு காமெடி, என்ன ஒரு வில்லத்தனம், என்ன ஒரு பெர்ஃபார்மென்ஸ். சூப்பர், நல்லா பண்ணுங்க' என பாராட்டினார். எனக்கு அந்த இடத்துல உயிரே போனால் கூட பரவாயில்லை. அப்படின்னு இருந்தது எனக்கு. அவ்ளோ பெரிய ஹீரோ அவர் வந்து அப்படி பேசுறார்ன்னா நான் அவரு மனசுல நிக்குறோம்ல" என் மனம் நெகிழ்ந்து நடிகை சுமதி தெரிவித்திருந்தார்.