திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடியை சேர்ந்த நடிகை சரண்யா ரவிச்சந்திரன், வலையொளிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர். நாடக நடிகையாகவும் வலம் வரும் இவர், நூற்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார்.
இயக்குனர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான 'வெள்ளை யானை' படம் இந்திய விவசாயிகளின் பிரச்சினைகளை காட்சிப்படுத்திய விதத்தில் பரவலாக பாராட்டைப்பெற்றது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஆத்மியா, சரண்யா ரவிச்சந்திரன், ஈ.ராமதாஸ், யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
குறிப்பாக சமுத்திரக்கனியின் நண்பர் மூர்த்தியின் மனைவியாக இதில் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருப்பார். விவசாயத்துக்காக வாங்கிய வங்கிக் கடனை கட்ட முடியாமல் கணவர் இறந்து போன பின்னர், பிணவறை முன்பு சரண்யா நடித்த நடிப்பு அனைவராலும் பாராட்டப்பெற்றது.
இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'காதலும் கடந்து போகும்' படத்தில் அறிமுகமானார். பின்னர் 'இறைவி', 'வடசென்னை', 'மேயாத மான், "இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு", 'வர்மா' , சீறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 'வர்மா' படத்தில் பிரசவ அறையில் இவர் நடித்த காட்சியை பார்த்து இயக்குனர் பாலாவே இவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இன்றைக்கு ட்ரெண்டிங்கில் இருக்க கூடிய ஓடிடி தளங்களிலும் சரண்யா ரவிச்சந்திரன் பிரபலம் தான். ஆம், ஜீ-5 தளத்தில் வெளியான ஆட்டோ ஷங்கர் தொடரில் ஆட்டோ ஷங்கரின் மனைவியாக நடித்திருந்தார். இதேபோல் விகடனில் வெளியான ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸிலும் சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் தற்போது அளித்த பேட்டியில் தான் கடந்து வந்த பாதைகளை நினைவு கூர்ந்து உள்ளார். ஆறு வருடமாக சினிமாவில் இவர் எடுத்த முயற்சிகள், பட்ட அவமானங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.
அதில், “அப்பா விவசாயி.. அம்மா சித்தாள்.. கஷ்டப்பட்டு வளர்ந்து தான் இந்த நிலைமையில் இருக்கேன்! எங்க அம்மா தாலியை அடகு வைத்து தான் படித்தேன்.. கருப்பாக இருப்பதால் தமிழ் சினிமாவில் புறக்கணித்தார்கள்.. ஒரு பெரிய டைரக்டர் கூட கிண்டல் பண்ணினார்.. நிறைய நாள் சாப்பிடாம பட்டினியா இருந்திருக்கேன்.. உன்னால எல்லாம் இந்த சினிமால ஜெயிக்க முடியாதுனு கூட சொன்னாங்க.. டிரெஸ் வாங்க, செருப்பு வாங்க, ஏன் சாப்பிட கூட காசில்லாம இருந்திருக்கேன்.. சினிமாங்கிறது சாமி மாதிரி... ஒரு தலை காதல் மாதிரி... அதை நம்புனா கைவிடாது!” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
குறிப்பாக நாம் எப்போதும் “ரியாலிட்டியை புரிந்துகொண்டிருக்க வேண்டும். நமக்கு என்ன வரும் வராது.. நமக்கு எது செட் ஆகும் ஆகாது என்பவை பற்றி நமக்கே ஒரு யோசனை இருக்க வேண்டும். நிச்சயமாக ஓவர் கான்ஃபிடண்ட்டாக இருந்துவிடக் கூடாது.” என்றும் சரண்யா ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
தற்போது தல அஜித்தின் 'வலிமை' படத்திலும், விஷாலின் 'எனிமி' படத்திலும், வசந்த பாலனின் 'ஜெயில்' படத்திலும் சரண்யா ரவிச்சந்திரன் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் பேசிய முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம்.