யூடியூப் பிரபலமான கிஷோர்.கே.ஸ்வாமி முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறான கருத்தை சமூக வலை தளங்களில் வெளியிட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் மேலும் ஒரு பெண் பத்திரிகையாளர் பற்றி சமூக வலைதளங்களில் மோசமாக சித்தரித்து எழுதியதாகவும் பேசியதாகவும் புகார்கள் எழுந்ததையடுத்து அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து கிஷோர்.கே.ஸ்வாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு பிறகு அவர் மீது பல புகார்களை பலரும் தொடர்ந்து அளித்து வருவதை காணமுடிகிறது.
சமூக வலைதளங்களை பொருத்தவரை கிஷோர்.கே.ஸ்வாமியை பலரும் பின் தொடர்கின்றனர். அவருடைய பேச்சில் அனல் பறக்கும் ஒரு சர்ச்சை உருவாவதை தொடர்ச்சியாக காண முடியும். இந்த நிலையில்தான் பிரபல நடிகை ரோகிணி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிஷோர்.கே.ஸ்வாமி மீது புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில் தன்னை பற்றியும் மறைந்த தன்னுடைய முன்னாள் கணவரான நடிகர் ரகுவரன் பற்றியும் கிஷோர் கே ஸ்வாமி தவறாக பேசியதாகவும் தன் மனுவில் குறிப்பிட்டதாக தெரிகிறது. மேலும் இந்த புகாரை ரோகிணி ஆன்லைன் மூலமாகவே கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரோகிணி புகார் தொடர்பாக கிஷோர் கே ஸ்வாமி மீது மேலும் கூடுதலான வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.