திரைத்துறையில் நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டாக அறியப்படும் இளம் பிரபலம் ரவீனா.
பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவியின் மகளான ரவீனா, தற்போது தன்னுடைய தந்தையை இழந்து இருக்கிறார். ரவீனாவின் தந்தையும் ஸ்ரீஜாவின் கணவருமான ரவீந்திரநாத், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்த நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.
தன் அம்மாவைப் போலவே டப்பிங் கலைஞராக மலர்ந்த ரவீனா, திரைத் துறையின் முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், அமலாபால், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலருக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.
இதேபோல் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ திரைப்படத்தில் நாயகி ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியதற்காக ரவீனா விருதும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தில் அறிமுக நடிகையாக நடித்த ரவீனா, அதனை தொடர்ந்து ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.
Extremely sad to hear the passing of @raveena116’s Father,
Deepest Condolences, Pls Stay Strong, We are with You Always !!
— Vishal (@VishalKOfficial) August 31, 2021
தற்போது விஷால் நடித்து வரும் விஷால் 31 திரைப்படமான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவீனாவின் தந்தை காலமான தகவலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார். திரைத்துறையில் பலரும் ரவீனாவின் தந்தை மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.