இணைய உலகம் எந்த அளவுக்கு அனைத்து வித ப்பரிமாற்றங்களையும் எளிதாக்குகிறதோ, அதே அளவுக்கு ஆபத்து நிறைந்ததும் கூட. போதிய விழிப்புணர்வு இருக்கும்போதிலும் இணைய உலகிலும் திருடர்கள் அவ்வப்போது தங்கள் கைவரிசையைக் காட்டுவதுண்டு.
அப்படித்தான் சாமானியர்களின் சமூல வலைதளங்கள் முதல், பிரபலங்களின் சமூக வலைதளம் வரை ஹேக் செய்யப்படுவதை நாம் காண்கிறோம். அந்த வகையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாக நடிகை ராதிகாவின் மகள் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.
நடிகை ராதிகாவின் மகள் ரயேன் மிதுன் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிடும்போது, ராதிகாவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அதில் இருந்து அனுப்பப்படும் மெசேஜ்களைத் திறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரபல 90ஸ் கிட்ஸ் ஹீரோயினும் நடிகையும் தயாரிப்பாளரும், அரசியலாளருமான குஷ்பூ சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நண்பரான ராதிகாவின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, இதுகுறித்து புகார் எழுப்பப்பட்டு, இந்த சிக்கல் சரிசெய்யப்பட முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நேரத்தில் மக்களோடு தொடர்பில் இருக்க இயலாமல் போனதற்காக ராதிகா வருந்துவதாகவும், தெரிவித்த குஷ்பு, விரைவில் ராதிகா மக்களுடன் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் கடைசியாக அஜீத் குமார் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் அம்மா பாடலின் வீடியோ, ஜீ.வி.பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தின் ரிலீஸ் உறுதியான விஷயம் உள்ளிட்டவற்றை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதிகா தற்போது சிம்புவின் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.