பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி, பல பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த படத்தில் வந்தியத்தேவன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர், அடுத்ததாக கார்த்தி நடிப்பில் 'சர்தார்' திரைப்படம் வெளியாக உள்ளது.
தீபாவளி விருந்தாக, அக்டோபர் 21 ஆம் தேதியன்று சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் இந்த திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கன்னாவும், ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரிப்பழகி என அழைக்கப்படும் நடிகை லைலாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் ட்ரைலர் இன்று (14.10.2022) வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சர்தார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை லைலா பேசிய விஷயங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை லைலா, "மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி பிஎஸ் மித்ரன் சார். கேமராமேன் ஜார்ஜ் மற்றும் பிஎஸ் மித்ரன் ஆகியோர் நட்பு அற்புதமாக இருக்கிறது. என்னிடம் ஒரு வீடியோ உள்ளது. அதனை எடிட் செய்து நான் பின்னர் ரிலீஸ் செய்வேன். அதே போல, அவர்கள் என்னை Torture செய்யவும் செய்தார்கள்" என சிரித்துக் கொண்டே ஜாலியாகவும் லைலா குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் ரசிகர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இது தவிர படக்குழுவினர்கள் அனைவரும் சர்தார் திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.