ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என புகழப்படுபவர் ரஜினி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இதில் குஷ்பூ, மீனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் வருகை குறித்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் ரஜினி பேசிய கருத்துக்கு பல்வேறு விதமான பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது. ''ரஜினியின் பிரஸ் மீட் ஒரு ஏமாற்றம்தான். இதை சொல்ல ஏன் இத்தனை பிரத்யேகமாக ஒரு பிரஸ்மீட். இதை ஒரு அறிக்கையாகவே வெளியிட்டிருக்கலாம். மேலும் ஜெயிச்சாலும் கட்சி ஆரம்பிச்சாலும் முதலமைச்சர் ஆகமாட்டேன் என அவர் சொன்னது அதிர்ச்சியாக உள்ளது. அவர் இருக்கும் போது வேறு ஒருத்தரை முதலமைச்சராக்க பார்ப்பது, அவரது தொண்டர்களுக்கு வேகத்தடையாக அமையும். அவர் ஒரு இயக்கமாக இதை நடத்த விரும்பினால், ஏன் கட்சி ஆரம்பிக்க வேண்டும், கட்சி என்றாலே தேர்தல் அரசியல்தான். அந்த இடத்தில் நான் கண்டிப்பாக வேறுபடுகிறேன். ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவர் தான் முதலமைச்சர் கேன்டிடேட்டாக நிற்க வேண்டும். இதுதான் எல்லோரின் விருப்பமும் கூட. உங்க இடத்தில் வேறு யாரையும் எங்களால் யோசிக்க முடியாது, அதே போல் நீங்களும் யோசிக்காமல், சீக்கிரம் வாங்க' என அவர் தெரிவித்துள்ளார்.