குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற இளம் பெண் ஒருவர், கடந்த ஜூன் மாதம் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விஷயம், இந்திய அளவில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது.
இந்தியாவின் முதல் Sologamy திருமணம் செய்த பெண்ணாக ஷாமா பிந்து அறியப்பட்டு வரும் நிலையில், தற்போது அதே முடிவை பிரபல நடிகை ஒருவரும் எடுத்துள்ளார்.
குஜராத்தை சேர்ந்த பிரபல நடிகை கனிஷ்கா சோனி. பவித்ரா ரிஷ்டா என்ற தொலைகாட்சி தொடர் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான கனிஷ்கா, தமிழில் விவேக் நடித்திருந்த பத்தாயிரம் கோடி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை கனிஷ்கா சோனி அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக கனிஷ்கா பகிர்ந்த பதிவு ஒன்றில், என்னையே நான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் நான் என்னையே காதலிக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். எந்த ஆண்களும் தனக்கு தேவை இல்லை என்றும் தனிமையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தான் இந்த முடிவை எடுத்ததாக கனிஷ்கா சோனி குறிப்பிட்டிருந்தார். தனக்குள் சிவன் மற்றும் சக்தி இருப்பதாகவும் கனிஷ்கா கூறி இருந்தார்.
குங்குமம் மற்றும் தாலியுடன் புகைப்படத்தை பகிர்ந்து, பிரபல நடிகை கனிஷ்கா சோனி எடுத்த முடிவு, இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. பலரும் கனிஷ்கா சோனி முடிவு குறித்து கேள்விகள் மற்றும் விமர்சனங்களையும் எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், இதற்கு அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், சில கருத்துக்களை சமீபத்தில் கனிஷ்கா சோனி பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த இன்ஸ்டா பதிவில், "என்னுடைய சுய திருமண முடிவு குறித்து நீங்கள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளீர்கள் என எனக்கு தெரியும். நான் இந்திய கலாச்சாரத்தை உண்மையாக நம்புகிறேன். அதனால் தான், தனிமையில் வாழ முடிவு செய்தேன். திருமணம் என்பது உடலுறவு பற்றியது அல்ல, ஒருவர் தேடும் அன்பு மற்றும் நேர்மை பற்றியது. அதன் மீதான நம்பிக்கையை இழந்ததால், வெளியுலகில் அன்பை தேடுவதை விட, என்னையே நான் நேசித்து தனியாக வாழ வேண்டும் என்பதே சிறந்தது என நினைத்தேன்.
ட்ரெண்டிங்கில் எனது செய்தியை உண்டு பண்ணியதற்கு நன்றி. இருந்தாலும் அது என்னுடைய நோக்கம் கிடையாது. சிலர் நான் போதையில் இருந்த போது அப்படி பதிவு செய்ததாக குறிப்பிட்டார்கள். ஆனால், மனதளவில் ஒரு இந்தியராக சொல்கிறேன், நான் நீண்ட காலமாக சினிமா துறையில் இருக்கும் நிலையில், மது உள்ளிட்ட போதை பொருட்களை தொட்டதே இல்லை. இது என் முழு மனதுடனும், உணர்வுடனும் எடுக்கப்பட்ட முடிவு. நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். ஹாலிவுட் பயணத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்" என தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதற்கு எழுந்த விமர்சனங்களுக்கு கனிஷ்கா விளக்கம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான பதிவு, தற்போது மீண்டும் இணையத்தில் அதிகம் ரவுண்டு அடித்து வருகிறது.