மும்பை: நடிகை கங்கனா ரனாவத் புதிய படத்திற்கு ஆதரவாக ஒட்டு மொத்த பாலிவுட் திரையுலகையும் விமர்சித்துள்ளார்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. மார்ச் 11 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பல அரசியல் சினிமா பிரபலங்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. காஷ்மீரிலிருந்து காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை அடிப்படை கதை களமாக கொண்டு படம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார். பிரதமருடனான சந்திப்புக்கு பின் பேசிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, "பிரதமரின், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி பாராட்டிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து பாலிவுட் பெரும் அமைதி காப்பது ஏன் என நடிகை கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் படம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பாலிவுட் வட்டாரங்களில் நிலவும் மயான அமைதியை கவனியுங்கள். இந்தப் படம் ஒவ்வொரு கட்டுக்கதையையும் உடைத்துள்ளது. இந்த வருடத்தின் வெற்றிகரமான மற்றும் லாபம் ஈட்டும் படமாக இருக்கும்.
கொரோனாவுக்கு பின் VFX கிராபிக்ஸ் மிகுந்த படங்களுக்கு தான் ரசிகர் வருவர் எனும் இது போன்ற எல்லா கட்டுக்கதைகளையும் முன்முடிவுகளையும் உடைத்து பார்வையாளர்களை மீண்டும் திரையரங்குகளுக்குக் கொண்டுவருகிறது, மல்டிபிளக்ஸ்களில் காலை 6 மணி காட்சிகள் நிரம்பியுள்ளன. நம்பமுடியாதது!!!
இந்தப் படத்துக்கு எந்த மலிவான விளம்பரமும் செய்யப்படவில்லை. வசூல் குறித்து எந்தவிதமான போலி கணக்குகளும் வெளியாகவில்லை. தேச விரோத மாஃபியாக்களின் செயல்திட்டங்கள் இல்லை. ஆனாலும் பாலிவுட் இந்தப் படம் குறித்து அமைதியை கடைபிடிப்பது ஏன் என தெரியவில்லை. நாடு மாறும் போது படங்களும் மாறும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தால் மீண்டும் சர்ச்சையில் கங்கனா சிக்கியுள்ளார்.