ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.
RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியுள்ளது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியுள்ளது.
இந்நிலையில் படத்தை பார்த்த நடிகை கங்கனா இன்ஸ்டாகிராமில் படம் பற்றியும் ராஜமௌலி பற்றியும் பதிவிட்டுள்ளார். அதில், "எஸ்.எஸ்.ராஜமௌலி சார் இதுவரை இந்திய திரைப்படங்களில் தலைசிறந்த இயக்குனர் என்று நிரூபித்துள்ளார்.... அவர் இதுவரை தோல்வி படத்தை கொடுத்ததில்லை...
ஆயினும்கூட, அவரைப் பற்றிய சிறந்த விஷயம் அவரது வெற்றி அல்ல, ஆனால் ஒரு கலைஞராக அவரது பணிவு, ஒரு நபராக சாதகி (எளிமை) மற்றும் அவரது தேசம் மற்றும் அவரது தர்மத்தின் மீது அவர் கொண்டிருந்த அதீத அன்பு. உங்களைப் போன்ற ஒருவர் எனக்கு முன்மாதிரியாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி சார்.. உண்மையுள்ள உங்கள் ரசிகர்" என கங்கனா ரனாவத் கூறியுள்ளார்