தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா உடன் 'வோர்ல்டு பேமஸ் லவ்வர்' என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் IIM திருச்சியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்ற அவர் தனது வாழ்க்கையை பற்றி மனம் திறந்துள்ளார்.
அவர் கூறும்போது "நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள். நீங்கள் குப்பம் என்று அழைக்கும் பகுதியில் ஹவுசிங் போர்டு அப்பார்ட்மெண்டில் தான் வளர்ந்தேன். எனக்கு மூன்று சகோதரர்கள். நான் எட்டு வயதாக இருக்கும்போது எனது தந்தை மரித்துவிட்டார். 12 வயதில் ஒரு அண்ணன் மரித்த போது, எங்கள் குடும்பமே அதிர்ந்து போனது. இந்நிலையில் ஒரு வருடத்திலேயே இன்னொரு சகோதரரும் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். என் வாழ்க்கையின் அந்த பகுதி மிகவும் மோசமானது. யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் சீரியல்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் மிக குறைந்த சம்பளம்தான் கொடுக்கப்பட்டது. சினிமாவில் எனது நிறம் ஒரு பெரிய பிரச்சினையாகவே பார்க்கப்பட்டது. நான் தமிழ் பேசியதால் கூட சிலர் என்னை நிராகரித்தார்கள். காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார்கள். ஆனால் அதையெல்லாம் செய்ய எனக்கு மனமில்லை.
எனக்கு நல்ல கேரக்டர்களை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. அட்டகத்தி படம் வந்த வாய்ப்பைக் கொடுத்தது. அதன்பிறகு 'காக்கா முட்டை' படத்தின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது. எல்லா வகை பிரச்சனைகளையும் சந்தித்து உள்ளேன். பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகி உள்ளேன். ஆனால் அப்படி பட்டவர்களை திருப்பி அடிக்கும் அளவிற்கு வலிமையாக இருந்துள்ளேன். அதேபோல் எல்லா பெண்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.