மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்க அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடத்த எழுத்தாளர், நடிகர் வேல. ராம மூர்த்தி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குணசித்திர, வில்லன் வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். குறிப்பாக மதயானைகூட்டம், சேதுபதி, கிடாரி முக்கியமானவை. கிடாரியில் இவர் செய்த கொம்பையா பாண்டியன் கதாபாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பாத்திரம் என்றால் மிகையாகாது. கமுதி பெருநாழியைச் சார்ந்த எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி. இவர் தற்போது மதுரையில் அவனியாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் எழுதிய குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட தமிழ் நாவல்கள் புகழ்பெற்றவை. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பாலமேட்டிலும் பின் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அவனியாபுரம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளது. மாடுகள் வரும் பாதை, ஜல்லிக்கட்டு மைதானம், மாடுபிடி வீரர்கள் பாதை, வாடிவாசல் உள்ளிட்ட பகுதிகள் மருத்துவ குழு மற்றும் பாதுகாப்பு குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடுபிடி வீரர்களும், 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இவர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் மேலும் போட்டி நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைக்கும் அதிகாரிகள், காளைகளின் உரிமையாளர்களும் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு அறிவித்தது.
இதனை எதிர்த்து எழுத்தாளர் வேல. ராம மூர்த்தி குரல் எழுப்பி உள்ளார். அதில் "தமிழகத்தின் பாரம்பரிய குறிப்பா மதுரையின் கலாச்சார திருவிழா ஜல்லிக்கட்டு. தமிழ்நாட்டில் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு. அதற்கு அடுத்த நாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இது 10 பேர், 100 பேர் பார்க்கக்கூடிய திருவிழா அல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பாக்குற திருவிழா. ஆனால் இந்த அரசாங்கம் என்ன செய்திருக்கு. 150 பேர் மட்டும் பார்க்கலாம்னு அறிவிச்சுருக்கு. 150 பேருக்காக எந்த மாட்டுக்காரனாவது காளையை அவிழ்த்துவிடுவானா? அந்த 150 பேர் யார்? அந்த 150 பேரை எப்படித் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? இது ஒரு தேவை இல்லாத காரியம். நல்ல அரசாங்கம் இருக்குற நேரம் இது, முதல்வரும் சரி, அதிகாரிகளும் சரி, அமைச்சர்களும் சரி எல்லாமே முற்போக்கான ஆளுக தான் இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இந்த காரியத்தில் முடிவெடுத்திருப்பது சரியாக தெரியவில்லை.
கொரோனாவை காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தாராளமாக நிறுத்தலாம். 150 பேர் என்றால் யார் அந்த 150 பேர்? மாடு பிடிக்கவே 150 பேர் வருவாங்க. 500 மாட்டுக்கு மாட்டு சொந்த காரவங்க 1000 பேர் வருவாங்க. இப்படி நடைபெறும் ஜல்லிக்கட்டு ஒரு அபத்தமானது. அறிவார்ந்த முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் இருக்கின்ற தமிழக அரசாங்கம் இப்படி முடிவு பண்லாமா? ஜல்லிக்கட்டு யாருக்கு நடத்துறீங்க, போலீஸ்க்கா? மேடையில் இருக்கின்ற அதிகாரிகளுக்கா? இது மக்கள் திருவிழா. இது தமிழனுடைய திருவிழா. தீபாவளி இந்திய அளவில் கொண்டாடக்கூடிய பண்டிகை. தைப்பொங்கல் தமிழ்நாட்டில், குறிப்பாக தென் மாவட்டங்களில் பண்பாட்டை கொண்டாடுகிற திருவிழா. இப்படிப்பட்ட ஒரு விழாவை 150 பேர் தான் பார்க்கலாம்னா என்ன அர்த்தம். இது சரியான முடிவாக எனக்கு தெரியவில்லை'' என்று வேல ராம மூர்த்தி கூறியுள்ளார்.