தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய இழப்பாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த விவேக் சினிமா மீது கொண்ட ஈடுபாடு காரணமாக சினிமாவில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா போன்ற அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
தனது காமெடிகளால் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த பெருமை அவருக்கு சேரும். எனவே தான் அவர் சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் பெருமையுடன் அழைக்கப்பட்டார். மேலும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் மாநில விருது, எடிசன் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி, "எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி. இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.