150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பத்மஸ்ரீ மற்றும் சின்ன கலைவாணரும் நகைச்சுவை நடிகருமான விவேக் சென்னை வடபழனி மருத்துவமனையில் காலமானார்.
நடிகர் பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் நேற்று காலை 11:00 மணியளவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி ஆகிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கிரிட்டிகலான நிலையில் எக்மோ (எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்றம்) சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் முந்தைய நாள் கோவிட் தடுப்பூசி விவேக் எடுத்துக்கொண்டது அவரது உடல்நலக்குறைபாட்டுக்கு காரணம் அல்ல என்றும் தமிழக சுகாதாரத் துறை தரப்பிலும் கோவிட் தடுப்பூசி காரணமாக இல்லாமல் இருக்கலாம் என மருத்துவமனை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விவேக் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு இந்தியா முழுவதுமுள்ள பிரபலங்களும் ரசிகர்களும் கலைஞர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2015-ஆம் ஆண்டு விவேக்கின் 13 வயது மகன் பிரசன்னா குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் துயரத்தில் இருந்த விவேக் பின்னர் மீண்டும் பல படங்களில் நடிக்கத் தொடங்கி, பரபரப்பாக இயங்கி வந்தார்.
கடைசியாக நடிகர் விவேக் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்திலும் நடித்திருந்தார்.