’அந்த மாதிரி ஒரு படத்துல எப்ப நடிக்க போறீங்க’…. விஜய்கிட்ட விஜய் கேட்ட கேள்வி!
”தமிழ் சினிமா இவ்ளோ உயரத்துக்கு கொண்டுவந்துருக்கு” …”நீ எப்போ அத செய்யபோற”… விஜய்யின் கேள்வி!
நடிகர் விஜய் சன் தொலைக்காட்சிக்கு அளித்த நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு….
பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதை அதன் ப்ரமோஷனுக்காக விஜய் தற்போது சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் என்ற நேர்காணல் நிகழ்ச்சியைக் கொடுத்துள்ளார். இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஆகும். இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார். இது சம்மந்தமாக வெளியான ப்ரோமோக்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் பேட்டியில் நெல்சனிடம் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறார் விஜய்.
தளபதி 66, அப்பா மற்றும் சஞ்சய்….
இந்த நேர்காணலில் பல விஷயங்களை விஜய் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தன்னுடைய அடுத்த படமான தளபதி 66 பற்றி ‘அந்த படம் ஒரு தமிழ்ப் படம்தான். எல்லோரும் தில்ராஜுவும் வம்சியும் தெலுங்கு நபர்கள் என்பதால் தெலுங்கு படம் என குழம்பி விட்டார்கள். அது தமிழ்ப் படம்தான்’ எனக் கூறியுள்ளார்.
மகன் சஞ்சய் பற்றி ‘சஞ்சய் நடிக்க போறாரா இல்ல கேமராக்கு பின்னால இருந்து செயல்பட போறாருன்னு தெரியல. நானும் காத்துட்டு இருக்கேன்’ எனக் கூறியுள்ளார். மேலும் பல இயக்குனர்கள் அவரை நடிக்க சொல்லி கேட்டு வருகின்றனர்’ எனக் கூறியுள்ளார். மேலும் அப்பா பற்றி பேசிய போது ‘கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். நம்மளால கடவுள பாக்க முடியாது. ஆனா அப்பாவ பாக்கமுடியும்.’ என நெகிழ்ச்சியாக பேசினார்.
விஜய்யிடம் விஜய் கேட்ட கேள்வி…
இந்த நேர்காணலில் நெல்சன் விஜய்யிடம் ‘நீங்களே உங்களிடம் ஒரு நேர்காணல் செய்தால், என்ன கேள்வி கேட்பீர்கள்’ எனக் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்ன விஜய் ‘ ஹாய் பிரதர்…. தமிழ் சினிமா உங்கள இவ்ளோ பெரிய உயரத்துல கொண்டுவந்து வச்சிருக்கு… தமிழ் சினிமாவ அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போற படத்துல எப்ப நடிக்க போறீங்க’ எனக் கேட்பேன் எனக் கூறினார். அதைக் கேட்ட நெல்சன் ‘சொல்லுங்க எப்ப நடிக்கப் போறீங்க’ என விஜய்யிடம் கேட்டார். அதற்கு விஜய் ‘ஒரு கேள்வி கேக்க சொன்ன… கேட்டுட்டேன். அவ்ளோதான் அதுக்குள்ள இன்னொரு கேள்வி கேக்காத’ என சொல்லி அடுத்த கேள்விக்கு நகர்ந்துவிட்டார்.