தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது காமெடிகள் காலங்கள் கடந்து இன்றும் கொண்டாடப்படுகிறது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தலைநகரம், மருதமலை, படிக்காதவன் படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்திற்கு 'நாய் சேகர்' என பெயர் வைப்பதாக வடிவேலு சமீபத்தில் அறிவித்தார். இந்த நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்காக பதிவு செய்துள்ளதால் வடிவேலு நடிக்கும் படத்திற்கு இந்த டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
சதீஷ் நடிக்கும் நாய் சேகர் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனால் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு "நாய் சேகர் ரிட்டன்ஸ்" என்று படத்தின் தலைப்பினை மாற்றி அறிவித்தது லைக்கா நிறுவனம். இந்த படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு லண்டன் சென்றது.
இந்நிலையில் லண்டன் சென்ற நாய் சேகர் ரிட்டன்ஸ் படக்குழு இன்று சென்னை திரும்பியது. விமானநிலையத்தில் செய்த கொரோணா பரிசோதனையில் நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டனில் ஒமிக்ரான் தொற்று அதிகமாவதால் ஊரடங்கிற்கு இங்கிலாந்து நாடு முழுவதும் தற்போது சென்று கொண்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கமல்ஹாசன், அர்ஜூன், விக்ரம் ஆகியோர் கொரோனாவின் தாகுதலுக்கு ஆளான இச்சூழலில் கோலிவுட்டின் மற்றொரு நடிகரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.