கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளியன்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது உறையில், இன்று ( 22.03.2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஆதரவாக பல்வேறு நடிகர்கள், நடிகைகள் வீடியோ வெளியிட்டு மக்களின் ஆதரவைக் கோரினர். அதன் ஒரு பகுதியாக நடிகர் சூர்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''கொரோனா வைரஸ் நம்ம நினச்சத விட வேகமாக பரவிட்டு இருக்கு. புயல், ஜல்லிக்கட்டு இப்படி பல்வேறு விஷயங்களுக்கு போராடுன நாம, இப்போ வீட்டில் இருந்து போராட வேண்டும்.
சீனாவ விட இத்தாலியில் அதிகம் உயிரிழப்பு ஏற்பட்டதுக்கு காரணம், அந்த மக்களோட அறியாமை தான். இந்தியா இன்னொரு இத்தாலியாக மாறக்கூடாது. எல்லா இருமலும் எல்லா காய்ச்சலும் கொரோனா கிடையாது. 5 நாட்கள் வரை உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். 5 நாட்களுக்கு மேல் இருந்தால் டாக்டரை அணுக சொல்றாங்க.
இறை வழிபாட்டுக்கு போறவங்க, ஹாஸ்பிட்டல் போறவங்க மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டும் போங்க. இல்லையென்றால் தயவு செய்து வெளியே போக வேண்டாம். கூட்டம் கூட்டமா போறதுக்கு இது வெக்கேஷன் டைம் கிடையாது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம்.
பத்து நாட்களில் 150 ஆக இருந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் 250 ஆக மாறியிருக்கு. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டு இருக்கிறதாக ,அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் வருத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர் தன்னை தனிமைப்படுத்திக்காம, பொது இடங்களுக்கு போனா, அவர சுத்தி உள்ள அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள். அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறை நீங்க செய்ய மாட்டீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
நமக்காக அதிகாரிகள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். அவர்களுக்காக நாம வீட்டிலேயே சுகாதாரமாக இருக்கலாமே. பயப்பட வேண்டிய விஷயத்துக்கு பயப்படாம இருக்கிறது முட்டாள் தனம்னு சொல்லுவாங்க. குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம். கொரோனா வைரஸை தடுப்பதில் அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமானதுனு சொல்றாங்க. எச்சரிக்கையுடன் இருப்போம். வருமுன் காப்போம்'' என்றார்.