சூரரைப் போற்று ரிலீஸுக்கு முன், நடிகர் சூர்யா பல்வேறு சங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் அபர்னா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த சூரரைப் போற்று, லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 30 அன்று சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட சூர்யா, இதில் ஒரு பகுதியாக வரும் பணத்தில் 5 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவிருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான 'பெப்ஸி' க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸியின் தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், என்பது லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க தனி அலுவலரிடம் வழங்குகிறார்.
தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகிக்கித்தார். சூர்யா,2D பட நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்,சுரேஷ்காமாட்சி லலித்குமார்,பங்கேற்றார்கள். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.