பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் மயில்சாமி காலமானார். 57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.
மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், மயில்சாமியின் நினைவுகளை நடிகர் சிங்கமுத்து நம்மிடையே பிரத்தியேகமாக பகிர்ந்து கொண்டார். அதில், "நடிகர் மயில்சாமி ஆரம்பத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வந்து கஷ்டப்பட்டார். போகப் போக தன்னுடைய அன்பாலும் உழைப்பாலும் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகர் என்பதையும் தாண்டி பொது சேவையில் ஈடுபட்டார். வெள்ளம், புயல் வந்த போது சாலிகிராமம் விருகம்பாக்கம் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை வழங்கினார்.
அதேபோல் ஷூட்டிங் ஸ்பாட்டில் புரொடக்ஷன் உணவு வரும் முன்பே அவர் உணவளித்து விடுவார். அவருக்கு வஞ்சகம், சூதுவாது, பந்தா எதுவுமே கிடையாது. பிறரை கெடுத்து தான் வாழ வேண்டும் என்று நினைக்க மாட்டார். மற்றவர்களுக்கு உதவி செய்து நிறைய வாழ வைத்திருக்கிறார்" என்று பேசியிருக்கிறார்.