இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் கேள்விகளுக்கு டிவிட்டரில் பதிலளித்தார்.
விக்ரம்
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
பரிசுகள்…
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் எப்படி?...
இந்நிலையில் விக்ரம் படம் குறித்த டிவிட்டர் லைவ் கேள்வி பதிலுக்கு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு #AskDirlokesh என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அழைப்பு விடுத்தார். இதில் பலரும் லோகேஷிடம் பல கேள்விகளைக் கேட்டனர். இதில் ரசிகர் ஒருவர், "கைதியில் இறந்த அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரம் எப்படி விக்ரம் படத்தில் உயிருடன் வந்தது ? இதை நம்ப முடியவில்லை" என கூறியிருந்தார்.
லோகேஷ் அவருக்கு அளித்த பதிலில், "கைதியில் நெப்போலியனால் அன்புவின் தாடை மட்டும் உடைந்தது, அதனால் விக்ரமில் அந்த இடத்தில் தையல் குறி இருக்கும்.. இது குறித்து கைதி 2 -ல் மேலும் விளக்கப்படும்" என லோகேஷ் கூறினார்.
சாந்தனு கேள்வி…
இதையடுத்து நடிகர் ஷாந்தனு இயக்குனர் லோகேஷிடம் “உங்கள் Multiverse-ல் நான் நடித்த பார்கவ் கதாபாத்திரம் மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறதா” எனக் கேட்டு டிவீட் செய்திருந்தார். இந்த டிவீட் தற்போது அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. சாந்தனு லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் பார்கவ் கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இறந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.