விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமிக்கு கோபி துரோகம் செய்தது, பாக்கியாவுக்கு தெரிய வர, அவர் கோபியுடன் சண்டை போட்டுவிட்டு வெளியேறிவிட்டார்.
இதேபோல் கோபியின் காதலியான ராதிகாவும் தன்னுடைய நெருங்கிய தோழியான பாக்கியலட்சுமிக்கே, தான் துரோகம் செய்தது போலான நிலையை உண்டாக்கிய கோபி மீது கோபமாக இருக்கிறார். ஆனாலும், ‘பாக்கியா வீட்டை விட்டு சென்று விட்டதால் அவளை மீண்டும் வீட்டுக்கு அழைக்கப் போவதில்லை’ என்று கோபி பிடிவாதமாக இருக்கிறார்.
இல்லத்தரசியின் கதை என்கிற பெயரில் பெண்களை மையமாக வைத்தும் , பெண் ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பாக்கியலட்சுமியின் மகனாக வருபவர் தான் விஜே விஷால். எழில் என்கிற கதாபாத்திரத்தில் வரும் இவர், தன் அம்மா பாக்கியலட்சுமிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜே விஷால், ஒருமுறை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் பங்குபெற்ற ஒரு ஷூட்டிங் ஸ்பாட்க்கு அருகில்தான், தாங்கள் இருக்கும் படப்பிடிப்பும் நடந்ததாகவும், அப்போது அவரை சந்தித்தபோது அவர் எழில் என்று அழைத்ததாகவும் குறிப்பிட்டு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில், “சசிகுமார் சார்.. என்னை எழில் என்று சொல்லி அழைத்த உடனே எனக்கு.. சார் கேரக்டர் பெயர் எல்லாம் சொல்லி அழைக்கிறீர்கள்.. என்னை தெரிகிறதா என்று கேட்டேன்.. அதற்கு அவர்.. வீட்டில் அனைவரும் பாக்கியலட்சுமி சீரியல் பார்க்கின்றனர்.. அதனால் தானும் பார்ப்பதாக கூறினார். மேலும் உங்க அப்பா கோபியை ரெண்டு சாத்து சாத்த வேண்டியதானே..? என்று கேட்டார்.. நாம் செய்யக்கூடிய சிறிய விஷயங்களை இப்படி பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் கவனிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது” என விஜே விஷால் தெரிவித்தார்.
இதைக் கேட்ட ராஜூ, “இந்தியில் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரெல்லாம் சிலாகிக்கும் ஒரு இயக்குநர் சசிகுமார், அவர் இப்படி நம் சீரியலை பார்ப்பதும் அதுகுறித்து கருத்து சொல்வதும் வியக்கத்தக்கதாக இருக்கிறது.. பெரிய விஷயம் கிரேட்.” என்று குறிப்பிட்டார்.