நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் சினிமா திரையுலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு திரைபிரபலங்கள் மயில்சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "அண்ணாமலையாரின் பெருங்கருணை".. மஹாசிவராத்திரியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. நெகிழ்ச்சி போஸ்ட்..!
57 வயது மதிக்கத்தக்க நடிகர் மயில்சாமி, பல தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த நடிகர் மயில்சாமி, மிமிக்கிரி கலைஞராக ஆரம்பத்தில் அறியப்பட்டார்.
1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட அக்கால படங்களில் நடித்தார். 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார்.
Images are subject to © copyright to their respective owners.
தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார். மயில்சாமியின் மறைவு, பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இந்த நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா மயில்சாமி உடனான தனது நட்பு குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார்.
இதுபற்றி பேசிய ரமேஷ் கண்ணா," நான், மயில்சாமி, விவேக் எல்லோரும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நண்பர்களாக இருந்தவர்கள். மயில்சாமி இருக்கும் இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பார். ஷூட்டிங்கில் அம்பதாயிரம் ரூபாய் பணம் கிடைத்தால் அதில் பாதியை அங்கே செலவழித்து விடுவார். அங்குள்ள மக்களுக்கு உணவு பொருட்கள் அளிப்பது போன்ற வேலைகளை விரும்பி செய்து வந்தார். பொதுவாக மழைக்காலத்தில் கூட நாம் வீட்டை விட்டு வெளியே வர யோசிப்போம்.
"ஆனால் பெரு வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும் தெருவில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியவர். ஒருபோதும் தன்னுடைய சோகங்கள் பற்றி அவர் பகிர்ந்து கொண்டதே இல்லை. எப்போதும் மகிழ்ச்சியுடனே தன்னையும் தான் இருக்கும் இடத்தையும் வைத்துக் கொள்ள ஆசைப்படுபவர். எனக்கு உடனே போன் பண்ணி பேச வேண்டும் அது தோன்றினால் நான் மயில்சாமிக்கு தான் போன் செய்வேன். ஆனால் அவரும் இப்போது இல்லை. ஏண்டா என்று இவ்வளவு சீக்கிரம் போயிட்ட என கேட்கத்தான் தோன்றுகிறது. 39 வருட நட்பு."
"1984 ஆம் ஆண்டு கன்னி ராசி எனும் படத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். அப்போது தான் மயில்சாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் நண்பர்களானோம். என்னிடம் சொல்லாமல் எதுவும் செய்ய மாட்டார். கிரகப் பிரவேசம், மகன் கல்யாணம் என எல்லாமே என்னிடம் சொல்லிவிடுவார். எங்களுக்குள் எவ்வித ஒளிவு மறைவும் இருந்தது கிடையாது. படத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் முதற்கொண்டு எங்களுக்குள் பேசிக்கொள்வோம். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்தினர் மற்றும் தமிழ் சினிமாவை தாண்டி எனக்கு பெரும் வேதனையை தந்திருக்கிறது. சமீபத்தில் தேர்தலில் கூட நின்றார். அப்போது கூட தொகுதி மக்களுக்கு என்னால முடிஞ்ச உதவியை செய்யணும் அண்ணே என சொன்னார். நடிகர் விவேக், ராம்தாஸ், டிபி கஜேந்திரன் இப்போது மயில்சாமி என அடுத்தடுத்து நல்ல நண்பர்களை இழந்து வருவது பெரும் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது" என்றார்.
Also Read | "20 நாளைக்கு முன்னாடி போன் பண்ணாரு.. அப்போது கூட".. மயில்சாமி பற்றி சார்லி உருக்கம்..!