இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.
முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான ஆவலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் மதுராந்தகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்த திரைப்படம் குறித்து சில பிரத்யேக தகவல்களை Behindwoods TV சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரகுமான், முன்னதாக பொன்னியின் செல்வன் சீரியலாக வர இருந்த போது தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் சில காரணங்களால் அது ஷூட்டிங் போகாமலே தள்ளிப் போனது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய ரகுமான், "பொன்னியின் செல்வன் படத்தின் அறிவிப்பு வந்த போது நமக்கு எல்லாம் இதில் வாய்ப்பு கிடைக்குமா என நினைத்தேன். ஆனால், எனக்கு நடிப்பதற்காக அழைப்பு வந்தது. எந்த கதாபாத்திரம் என யோசித்துக் கொண்டே அலுவலகம் சென்ற போது, மதுராந்தகர் கதாபாத்திரத்தில் நான் நடிக்க போவதாக கூறினார்கள்" என்றார்.
தொடர்ந்து, மதுராந்தகர் கதாபாத்திரத்தில் உள்ள விஷயம் குறித்தும், அந்த கதாபாத்திரத்திற்காக தான் தயாரான விதம் பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும், படத்தில் வரும் தனது காட்சி ஒன்று பற்றி பேசிய ரகுமான், "நானும் பார்த்திபனும் ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நான் வசனம் பேசியபடி, படியில் இருந்து கோபத்துடன் போக வேண்டும். எனது வசனம் முழுவதும் ஏராளமான அரசர்கள் பெயர் இருக்கும். அதனை அதே வரிசையில் பேச வேண்டும்.
மறுபக்கம், செட் போட்டது என்பதால் படிக்கட்டும் சற்று நீளமாக இருந்தது. மிகவும் கவனமாக தான் நடந்து செல்ல வேண்டும். கொஞ்சம் தவறினால் கூட ஆபத்து நேரும். அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த வசனத்தை படியை பார்க்காமல் நடந்தபடி பேச வேண்டும். இப்படி கவனமாக நடிக்க வேண்டும். இந்த வசனத்தை நான் பேசி முடித்ததும் அனைவரும் கைத்தட்டினார்கள். மணி சார் கூட நான் சிறப்பாக நடித்ததாக பாராட்டினார். அவர் 20 டேக் வரை போகும் என நினைத்தார். நான் 3 முதல் 4 ஷாட்களில் நடிப்பேன் என அவர் எதிர்பார்க்கவில்லை" என கூறினார்.
இது தவிர, இன்னும் ஏராளமான தகவல்களை நடிகர் ரகுமான் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான முழு வீடியோவைக் காண: