நடிகர் உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'இது கதிர்வேலன் காதல்', 'நண்பேண்டா', 'பொதுவாக எம்மனசு தங்கம்', 'நிமிர்' உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகராக திரைப்பட ரசிகர்களிடையே உருவெடுத்தார்.
முன்னாள் முதலமைச்சர், மறைந்த முத்தமிழர் அறிஞர், கலைஞர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவை பொருத்தவரை எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் தொடங்கி ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், அர்ஜூன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, விஷால் வரை பலருக்கும் அடைமொழிகள் உண்டு.
திரைப்படங்களில் நடிகர்களின் நடிப்புக்கும், மக்கள் ரசனைக்கும் ஏற்ப ரசிகர்களால் வைக்கப்பட்டு கொண்டாடப்படும் இந்த சிறப்புப் பெயர் ,தற்போது உயநிதிக்கும் சூட்டப்பட்டுள்ளது என்பது தெரியுமா? ஆம், நடிகராக மக்களிடையே அறிமுகமாகி, சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருக்கும் உதயநிதிக்கு தற்போது ‘மக்கள் அன்பன்’ உதயநிதி ஸ்டாலின் என புனைப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
முன்னதாக, உதயநிதி நடிப்பில் வெளியான திரைப்படம் “கண்ணே கலைமானே”. இந்த படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘இடிமுழக்கம்’ எனும் புதிய படத்தின் டைட்டில் லுக்கை நேற்று முன்தினம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டரில் வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உதயநிதி வெளியிடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பு போஸ்டரில்தான், நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர் உதயநிதியை ‘மக்கள் அன்பன்’ எனக் குறிப்பிட்டிருந்தனர் சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ் இணையும் இடிமுழுக்கம் படக்குழுவினர். அரசியலிலும், சினிமாவிலும் பயணித்து வருவதால் உதயநிதிக்கு ‘மக்கள் அன்பன்’ எனும் இந்த சிறப்பு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
Also Read: மீண்டும் ‘காதலர் தினம்’ கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் “மெகா கூட்டணி!”.. என்ன ஜானர் தெரியுமா?..