சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், பிரபல நகைச்சுவை நடிகரும் பலகுரல் கலைஞருமான மயில்சாமி மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கியிருக்கிறார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் சக்கை போடு போட்டு வருகின்றன.
திரைப்பட நடிகர் மயில்சாமி பல முன்னணி ஹீரோக்கள், நகைச்சுவை நடிகர்கள் ஆகியோருடன் இணைந்து பலதரப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் நடித்ததுடன் பல்வேறு திரைப்படங்களில் மிமிக்ரி செய்தும் மயில்சாமி அசத்துவார்.
புகழ்பெற்ற மிமிக்கிரி கலைஞராகவும் விளங்கும் மயில்சாமி, அண்மைக்காலமாக அரசியல் பிரவேசத்திலும் ஈடுபட்டார். இந்த நிலையில்தான் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மயில்சாமி, அங்கு தம்முடைய பாணியில், அரசியல் நையாண்டி விமர்சனம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறார்.
கடந்த சில மாதங்களாக பெட்ரோலின் விலை அதிகரித்துக் கொண்டே இருந்த நிலையில், மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நகைச்சுவை நடிகர் மயில்சாமி தொடர்ந்து முன்வைத்து வந்திருந்தார்.
அப்படித்தான் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இருந்த மயில்சாமி, திருமண மேடையில் வைத்து மணமக்களை வாழ்த்தியதுடன், அவர்களுக்கு திருமணத்துக்காக தரக்கூடிய அன்பு பரிசாக, பெட்ரோலை பரிசாக கொடுக்க திருமண அரங்கில் கூடியிருந்தவர்கள், மயில்சாமி செய்யும் நகைச்சுவை கலாட்டாவை பார்த்து மனம் விட்டுச் சிரித்தனர். அவரும் சிரித்தபடி மணமக்களுக்கு வெற்றிப் பரிசாக 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்குகிறார்.
திருமணத்துக்கு வந்தவர்களிடையே கவனத்தையும், கலகலப்பையும் உண்டு பண்ணிய, இந்த நூதன செயல்பாட்டை அடுத்து, திருமண நிகழ்வில் பேசிய நடிகர் மயில்சாமி, நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே செல்வதாகவும், மத்திய அரசுக்கு இதை தெரிவிக்கவே மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்கியதாகவும், அதே சமயம் மாநில அரசு பெட்ரோல் விலையை மூன்று ரூபாய் குறைத்ததற்கு பாராட்டுவதாகவும் குறிப்பிட்டு பேசினார்.
Also Read: நடிகர் உதயநிதி ஸ்டாலின்.. சினிமாவில் பெற்ற செம்ம மாஸான ‘சிறப்பு அடைமொழி’.. ..!