தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார்.
கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1980-களில் காங்கிரஸில் சேர்ந்து எம்.பி.யானார். ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.
அவரது மனைவியும் மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார். இந்நிலையில், அவருடைய தந்தை கிருஷ்ணா மரணமடைந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கிருஷ்ணாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.