சென்னை: வாடிவாசல் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" அவர்கள் எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.
இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே. இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றது. வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூர்வாங்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைகிறார்.
இது குறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜல்லிக்கட்டு - வடமாடுகளின் வாழ்வியல் சொல்லும் “வாடிவாசல்” எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. கதையின் கதாநாயகனாக சூர்யா நடிக்கும் இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். தமிழர் வீரம் செறிந்த வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குநராக இணைகிறார்.வாடிவாசலில் உதவி இயக்குநராக பணியாற்றும் நடிகர் கருணாஸிடம் பேசியபோது அவர் கூறியதாவது!
கிராமிய கானா பாடகராக என் கலை வாழ்வை தொடங்கியிருந்தாலும், இவ்வளவு பெரிய அடையாளத்தையும் அறிமுகத்தைதும் கொடுத்தது சினிமாதான். தாய்மடியான தமிழ் சினிமாவில் முழு நேரமும் பயணிக்க முடிவெடுத்து இருக்கிறேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற இருக்கிறேன். கடைசி வரை கற்றுக் கொள்வதுதான் சினிமாவின் சிறப்பு. இணைத்துக்கொண்ட வெற்றிக்கு, என் நன்றி!
தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறை சாற்றும் இத்திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்! ராமனுக்கு அணிலாக இருப்பதை போல், இந்த வெற்றி அணியில் வெற்றி மாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன்!
போலி வியாபார அரசியலை புறந்தள்ளிவிட்டு எனது கலைத்தாய் வீட்டுக்கு திரும்பியிருக்கிறேன்! நீண்டகாலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசலே வாசல் திறந்து விட்டிருக்கிறது! இவ்வாறு அவர் கூறினார்!