அமரர் கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1", 30.09.2022 அன்று உலகம் முழுவதும் வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
பல ஆண்டு காலமாக, பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏராளமான திரை பிரபலங்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
சுமார், 50 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ் சினிமாவின் இந்த கனவு, இயக்குனர் மணிரத்னத்தால் தற்போது நிறைவேறவும் செய்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுக்க பிரம்மாண்டமான வரவேற்பும் வழங்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன் 1 படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரகுமான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியந்து பார்த்து வைத்த நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்திற்கும், தனது கதாபாத்திரத்திற்கும் கிடைத்த வரவேற்பு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"வந்தியத்தேவனாக இந்த அற்புதமான பயணத்திற்கும், அனுபவத்திற்கும் கிடைத்த உணர்வை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. பொன்னியின் செல்வன் என்ற மாயாஜால காவியத்தை நம் அனைவருக்காக உருவாக்கிய அமரர் கல்கிக்கு முதலில் ஒரு பெரிய வணக்கமும், மரியாதையும். இத்தனை வருடங்கள் இதனை பின்பற்றி, மறக்க முடியாத ஒரு தலைசிறந்த படைப்பை உருவாக்கிய மணி சாருக்கு கோடான கோடி நன்றிகள்.
செட்டில் ஒரு உந்து சக்தியாக இருந்து, இதுவரை பார்த்திராத பிரம்மிக்க வைக்கும் காட்சிகளை வழங்கிய ரவி வர்மனுக்கும், எங்களின் பொக்கிஷம் ஏ ஆர் ரஹ்மான் சார் தனது இசையால் நம்மை பரவசப்படுத்தியதற்காகவும், பொற்காலத்தை மீண்டும் உருவாக்கிய தோட்டா தரணி சார் அவர்களுக்கும் நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர வசனம் எழுதிய ஜெயமோகன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றிகளை கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நடித்தவர்களுக்கும், தயாரிப்பாளருக்கும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உணர்ச்சி ததும்ப தனது நன்றிகளை கார்த்தி கூறி உள்ளார்.