கடந்த 2019 தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு இரவில் முன்னாள் கைதியான கார்த்தி, வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட போலிஸ் அதிகாரிகளை எப்படி காப்பாற்றினார் என்பதையும்,போலிசால் பிடிக்கப்பட்ட போதை மருந்துகளை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொண்டு போக வரும் வில்லன் கும்பல் பற்றியும், ஒரு கான்ஸ்டபிள் 5 கல்லூரி மாணவர்களை வைத்து அந்த இரவை எப்படி கடக்கிறார்கள் என்பதையும், விடுதியில் தங்கி இருக்கும் பெண் குழந்தையை பார்க்க வரும் கைதி கார்த்தி பற்றியும், படம் பேசுகிறது.
இப்படம் டைகார்ட், விருமாண்டி படங்களில் இருந்தும் இன்னும் சில படங்களில் இருந்து ஈர்க்கப்பட்டு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். அவற்றில் முக்கியமான படம் Assault On Precint13 1976ல் வெளியான இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.கைதி படத்தில் வரும் போலீஸ் கான்ஸ்டபிள் ஜார்ஜ் மரியமின் பெயர் நெப்போலியன்.அதே போல Assault On Precint13 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் நெப்போலியன். கைதி படத்தில் பிரமாதமான காட்சி என்பது கமிஷனர் அலுவலகத்தை தாக்குவது. Assault On Precint13 படத்தின் முக்கிய காட்சியும் அது தான்.
படத்தில் வரும் லாரி சம்பந்தப்பட்ட காட்சிகள் Hijack மற்றும் Wages of Fear படங்களின் தாக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும். கார்த்தி வரும் பகுதியின் அடிநாதமான 10 வருடங்களாக சிறையில் இருந்தவர் என்பதும் குழந்தையை பார்க்காதவர் என்பதும் Con Air படத்தின் தாக்கத்தில் இருக்கும். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சாம் சி எஸ் இசையில் சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்து இருந்தார். பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றினார்.
இந்நிலையில் ஜப்பானிய மொழியில் கைதி திரைப்படம் 'கைதி டில்லி' என்ற பெயரில், வரும் நவம்பர் 19, 2021 அன்று ஜப்பானில் திரைக்கு வர உள்ளது, மேலும் இந்த படம் ஜப்பானில் நடிகர் கார்த்தியின் முதல் வெளியீடாகும். ஹீரோசிமா நகரில் உள்ள திரையரங்கில் இதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.