பொங்கலையோட்டி ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் முளைப்பாரி ஆற்றில் விடும் விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி குடும்பத்துடன் சென்றிருந்தார். முளைப்பாரியை கால்வாயில் விட்ட அவர் பின்னர் மாசடைந்து கிடக்கும் அந்த கால்வாயை கிராம மக்கள் விவசாயத்துகு பயன்படுத்தும் விதமாக மீட்டெடுப்பது குறித்து பேசினார்:
’738 ஆண்டுகளுக்கு முன் காளிங்கராயன் என்பவர் இந்த கால்வாயை மக்கள் பயனடைய உருவாக்கினார். ஆனால், தற்போது அருகாமையில் தொழிற்சாலைகள் பெருகி உள்ளதால், கால்வாயில் கழிவுகள் கலந்து 40 ஆண்டுக்கு மேலாக கால்வாய் கடுமையாக மாசடைந்துள்ளது. இதை இளைஞர்கள் மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தான் சிறுவயதில் இந்த ஊரில் இருக்கும்போது இவ்வளவு நீரை கண்டதில்லை. இப்போது பார்க்கும்போது பொறாமை ஏற்படுகிறது. என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.’ என கார்த்தி தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தானும் விவசாயம் செய்ய வசதியாக சென்னைக்கு அருகில் ஒரு இடம் பார்த்து வருவதாக தெரிவித்தார்.