நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார்.
கடைசியாக சுல்தான் படத்தில் திரையரங்கில் காணப்பட்டார். தனது அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேசன் நடத்துவது போல, நடிகர் கார்த்தியும் உழவன் பவுண்டேசன் வைத்து இயற்கை விவசாயத்துக்கும், விவசாயிகள் மேம்பாட்டிற்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். மேலும் கால்வாய்கள் வெட்டுதல், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மேம்பாட்டிலும் உழவன் பவுண்டேசன் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியிலும் உழவன் பவுண்டேஷன் முக்கிய பங்கு வகிக்கிறது. 1400 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் முனைவர் தேபால் தேப் அவர்களுக்கு சென்ற வருடம் உழவன் ஃபவுண்டேஷன் ரூபாய் 2 லட்சம் நன்கொடை அளித்தது. மேலும் வருடந்தோறும் உழவன் விருதுகள் வழங்கி உழவர்களை சிறப்பித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் அறிவுரைப்படி அவரது ரசிகர்கள் சென்னைப் பெருநகரங்களில் உணவு வண்டியை தொடங்கி உள்ளனர். உணவுக்கான விலையாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பு சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து நடிகர் சுகுமார் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், "சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது... 10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு.!!! நல்ல நண்பனாக! நல்ல தந்தையாக!, நல்ல மனித நேயனாக கார்த்தி மிளிருகிறார்.!! தனது ரசிகர்களை வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக பார்க்காமல் ..கரம் கொடுத்து சி(க)ரம் உயர வைக்கிறார்.. அண்ணாமலை படத்தில் வினுச்சக்ரவர்த்தி சொல்வாரே.."புள்ளன்னு பெத்தா இப்பிடி ஒரு புள்ளையப் பெக்கணும்..! உதாரணம் கார்த்தி sir.!! வளர்ப்பு அப்படி.!!! WELDON BOY!!" என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கார்த்தி பொன்னியின் செல்வன் படத்திலும், விருமன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். விருமன் படம் 2022 சம்மர் காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.
அப்போ லிப் கிஸ்.. இப்போ கர்ப்பமா? அடுத்தடுத்து ட்ரெண்ட் ஆகும் 'பிரேமம்' ஹீரோயின்..