கொடைக்கானல் பகுதியில், கடந்த சில நாட்களாக ஏற்பட்ட காட்டுத் தீ, மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதி, தமிழகத்தின் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்றாகும்.
காட்டுத் தீ
அங்கு தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால், வனப்பகுதியில் உள்ள செடிகளும், மரங்களும் காய்ந்த நிலையில் உள்ளன. மேலும், கடந்த இரண்டு நாட்களாக, தோகை வரை, மயிலாடும்பாறை உள்ளிட்ட சில இடங்களில்,காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றின் வேகம்
சுமார் 100 ஏக்கருக்கு அதிகமான வான்பரப்பில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, வன விலங்குகள் இடம்பெயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயின் காரணமாக, பல அரிய வகை செடிகளும், மரங்களும் நாசமாகியுள்ளன. மச்சூர் மலைப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ள நிலையில், ஒரு பக்கம் காற்றின் வேகம் காரணமாக, தீயின் பரவலும் சில வேளைகளில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
விழிப்புணர்வு காணொளி
இதனால், வனத்துறையினர் கடுமையான சிக்கல்களையும் சந்தித்து வருகின்றனர். வனத்துறையினரின் தீவிர முயற்சியின் பெயரில், சீக்கிரம் காட்டுத் தீ அணைக்கப்பட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள், வேண்டி வருகின்றனர். இதனிடையே, நடிகர் கார்த்தி பேசும் விழிப்புணர்வு காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
தீப்பொறி பட்டால் போதும்
அதில் பேசும் கார்த்தி, "கோடை வெயிலுக்கு இதமளிக்க இயற்கை தந்த வரம் கொடைக்கானல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே இது ஒரு கனவாக இருக்கும். எத்தனையோ, வன விலங்குகள், பறவைகள், தாவரங்கள் அங்கே இருக்கிறது. ஒரு எச்சரிக்கை. இது நெருப்புக்காக. ஒரு சின்ன தீப்பொறி பட்டால் போதும், காட்டோடு சேர்ந்து பறவைகளும், வன விலங்குகளும் அழிந்து போகும் அபாயம் இருக்கிறது.
இணைந்திருப்போம்
இதனால், பொது மக்கள் நாம் அனைவரும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான இந்த போரில் வனத்துறையினருடன் இணைந்திருப்போம். நன்றி" என நடிகர் கார்த்தி குறிப்பிட்டுள்ளார்.
விவசாய பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பொது பிரச்சனைகள் உருவாகும் சூழலில், தன்னுடைய நிலைப்பாட்டை தொடர்ந்து நடிகர் கார்த்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.