நடிகர் பாலா தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான நடிகர் பாலா(பாலக்குமார்) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். ஏற்கனவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில் அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார் பாலா. இந்த படத்தின் மூலம் கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபல நாயகனானார் பாலா. மோகன்லாலின் புலிமுருகன் படத்திலும் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தமிழில் அண்ணாத்த படத்தில் பல வில்லன்களில் ஒருவராக பாலா நடித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.
இவர் முதல் மனைவி அம்ருதாவை 2019ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் பாலாவுக்கு அவந்திகா எனும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.
சில நாட்களுக்கு முன் நடிகர் பாலாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் நடிகர் பாலாவை இயக்குனர் சிறுத்தை சிவா, அவருடைய கல்லூரி கால நண்பரும் ஒளிப்பதிவாளருமான வெற்றி பழனிச்சாமி, நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் பாலா முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் கூறி பாலா பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது இந்த புகைப்படத்தை கவர் போட்டோவாகவும் பாலா முகநூல் பக்கத்தில் வைத்துள்ளார்.