இந்தியாவில் கொரோனா தொற்று நோய் உலக அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு உலகில் தோன்றிய கொரோனா எனும் கொடூர வைரஸ் தொற்று நோய் உலகின் பல நாடுகளை உலுக்கியது.
பல மரண சம்பவங்கள் நடந்தன. எனினும் உலக நாடுகள் மட்டுமல்லாது இந்தியாவும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு ஆரம்பகட்ட முயற்சிகளை செய்து ஓரளவுக்கு அதை சாத்தியப்படுத்தும் முயற்சியையும் செய்தது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் இரண்டாவது அலை தலைதூக்கி இருக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே ஊரடங்கு, பொதுமுடக்கம் ஒருபக்கம் நடந்தாலும் இன்னொரு பக்கம் இரண்டாவது அலையால் பலரும் மருத்துவமனை, ஆக்சிஜன் வசதி உள்ளிட்டவற்றுக்காக தொடர்ந்து இயங்கி வருகின்றனர். இதனிடையே அரசு மட்டுமல்லாமல் நடிகர்களும் மக்களுக்கு தங்களாலான உதவிகளை, சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும் விஜய் ரசிகர்களுமான சிலர் விருத்தாசலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கி உதவி செய்தனர்.
அந்த வகையில் பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா ஆம்புலன்ஸ் டிரைவராக பொறுப்பேற்று இந்த பாண்டமிக் காலத்தில் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்து வருகிறார். அவருடைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள அர்ஜூன் கௌடா, அனைவருக்கும் நன்றி கூறியதோடு தன்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து வரும் மக்களுக்கு நன்றி கூறி இந்த வாய்ப்பு அளித்தமைக்கு பிரபல ஆம்புலன்ஸ் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயிற்சியுடன் அவர் எடுத்துக் கொண்டதாகவும் இந்த பணியை, தான் விரும்பியும் அர்ப்பணிப்புடனும் கர்நாடக மக்களுக்கு சேவை அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும் கையில் எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக அர்ஜுன் கௌடாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.