பிக்பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் பிரபல போட்டியாளர்களில் ஒருவர் அபிஷேக். யூடியூப் பிரபலம் மற்றும் பிரபல விஜேவாக வலம் வரும் இவர் பிக்பாஸ் வீட்டில் ஒரு இளம் வயது போட்டியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பிக்பாஸ் ஒவ்வொருவரின் கதையையும் சொல்ல வேண்டும் என்று டாஸ்க் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக மாஸ்டர் பட நடிகர் சிபியை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்த பிக்பாஸ், அவரிடத்தில் ஒரு லெட்டரை கொடுத்து அந்த லெட்டரை போட்டியாளர்களுக்கு மத்தியில் படித்துக் காட்டச் சொல்கிறார்.
அனைவரும் அவரவர் கதையை சொல்ல வேண்டும். இப்படி போக, இதனிடையே விஜே அபிஷேக் சிலர் மத்தியிலும் புல்வெளியில் அமர்ந்து ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வருண் பற்றி கூறும்போது, “மிகப்பெரிய தயாரிப்பாளரின் வாரிசாக - மிகப்பெரிய பணக்காரராக இருந்தும் அனைவரிடமும் எளிமையாகவும் எதார்த்தமாகவும் பழகக் கூடியவர்” என்று அபிஷேக் குறிப்பிட்டார்.
இதேபோல் மாஸ்டர் சிபியை பற்றி கூறிய அபிஷேக், “ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருத்தப் படவோ - ஏமாற்றமடையவோ செய்யமாட்டார் என்பது போல் தெரிகிறார்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சாவித்திரி - ஜெமினி கணேசனின் பேரனான அபினவ் பற்றியும் அபிஷேக் பேசத் தொடங்கினார். அவர் பற்றி அபிஷேக் குறிப்பிடும்போது, “ராஜ பரம்பரையில் பதவிக்கு ஆசைப்படாத ஒரு பையன்தான் அபினவ். சாவித்திரியின் பேரனாக இருந்தாலும் கூட சொந்தமாக சொந்தக்காலில் முன்னுக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்” என்று கூறினார்.
இப்படி சொல்லிக் கொண்டே வரும் பொழுது தன்னுடைய அம்மா நினைவு வந்து திடீரென உருக்கமாக பேச தொடங்கிவிட்டார் அபிஷேக். அதன்படி தன்னுடைய அம்மாவிடம் தான் பல சூழல்களில் கோபப்பட்டதாகவும், அபிஷேக்கின் விவாகரத்துக்குப் பிறகு அவருடைய அம்மா வலியை அதிகம் அனுபவிப்பதாகவும் கூறி, திடீரென வெடித்து அழத் தொடங்கினார் அபிஷேக். சுற்றியிருப்பவர்கள் அபிஷேக்கை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
“கலகலவென்று ஒவ்வொருவரைப் பற்றியும் தானாகவே பேசிக் கொண்டிருந்த அபிஷேக், இப்படி திடீரென வெடித்து அழுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இவர் ஜாலியாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இவர் இந்த அளவுக்கு சென்சிட்டிவான ஆளா?” என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.